அநுராதபுரம் – காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை 2 மாதங்களுக்குள் மீள ஆரம்பம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Tuesday, May 2nd, 2023இரண்டு மாதங்களுக்குள் அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஓமந்தை வரையிலான ரயில் பாதை திருத்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் தொடர்பில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் அங்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான பழைமையான ரயில் பாதையை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பாதை புதிதாக உருவாக்கப்பட்டு மணித்தியாலத்திற்கு 100 மீற்றர் வேகத்தில் ரயில்கள் பயணிக்கும் வகையில் இந்த பாதை நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது.
மகவயிலிருந்து ஓமந்தை வரையிலான இந்த திட்டத்திற்காக இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 3500 கோடி ரூபா நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமை காணப்பட்டாலும் இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தித் திட்டம் இதுவாகும்.
இப்பாதையின் திருத்தப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவரும் நிலையில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் காங்கேசன்துறை வரை ரயில் சேவையை ஆரம்பிக்க முடியுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன் அநுராதபுரம்முதல் மகவ வரையிலான ரயில் பாதையை மிகக் குறுகிய காலத்திற்குள் நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவுசெய்யப்படுவதுடன் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு வரை சொகுசாகவும் விரைவாகவும் பயணத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் ரயில்சேவைகள் நடத்தப்படும்.
அதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்ல செலவாகும் நேரத்தை ஒன்றரை மணித்தியாலத்தால் குறைத்துக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|