அநீதி இழைக்கப்படுமானால் பாரிய போராட்டம் – வடமாகாணக் கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர்!

Sunday, May 7th, 2017

தொடர்ந்தும் வடபகுதி மீனவர்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் தென்னிலங்கைத் தொழிற் சங்கங்களையும் ஒன்றிணைத்துப் பாரிய போராட்டங்களை வடபகுதியிலும், கொழும்பு நகரிலும் முன்னெடுக்க வேண்டி வரும் என்பதை அரசாங்கத்திற்கு எச்சரிக்கையாக விடுக்க விரும்புகிறோம் என வடமாகாணக் கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் மொகமட் ஆலம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கையின் கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர வடபகுதி மீனவர்களின் இணைக்கப்பாடின்றி, அவர்களின் கருத்துக்களை அறியாமல் கைப்பற்றப்பட்டுள்ள படகுகள் விடுவிக்கப்பட மாட்டாது என்ற கருத்தைத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறார். கடந்த பாராளுமன்றத்தின் அமர்விலும் இந்த விடயத்தை மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார். வடபகுதி மீனவர்கள் தொடர்பான அவரது கருத்துக்குத் தொடர்ந்தும் நாங்கள் நன்றி தெரிவித்து வருகிறோம்.

குறிப்பாக நவம்பர் மாதம் -02ஆம்  திகதி டில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கிணங்கக் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் எக்காரணம் கொண்டும் விடுவிக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாகவிருக்கிறோம்.

ஆனால், மீன்பிடி அமைச்சரின் பல கருத்துக்களில் வித்தியாசமான போக்குகள் காணப்படுகின்றன. இன்று அரச மட்டத்தில் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றதா? அல்லது இந்தியத் தரப்பால் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றதா? என்பது கேள்வியாகவிருக்கின்றது. கைப்பற்றப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க அவர் எடுக்கும் நடவடிக்கையானது எங்களது கடந்த காலப் போராட்டங்களுக்கு ஒரு முட்டுக் கட்டையாகவுள்ளது.

கடந்த மாதம்-05 ஆம் திகதி நாம் மீன்பிடி அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது நாங்கள் ஆராய விடயங்களை முன்னிலைப்படுத்தி அவருக்கு அறிக்கையொன்றை வழங்கியுள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஊடக சந்திப்பில் வடமாகாணக் கடற்தொழில் இணையத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Related posts: