அத்துமீறிப் பிரவேசிக்கும் இந்திய இழுவைப் படகு உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நஷ்டஈடுகள் பெறுவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிச்சயம் நிறைவேறும் : வடமாகாணக் கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் மொகமட் ஆலம் நம்பிக்கை

Wednesday, May 11th, 2016

அத்துமீறி எமது கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் இந்திய இழுவைப் படகு உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து நஷ்ட ஈடுகள் பெறுவதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு மாகாண சபைகளுக்குப் பரிந்துரைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தத்  திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிச்சயம் நிறைவேறும். எங்களின் பல்வேறு போராட்டங்கள்  மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்திய விடயங்களை மையப்படுத்தியதன் விளைவாகவே இந்தத் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  சட்டமா அதிபர் திணைக்களம் மீனவர்களின் கோரிக்கைகள் சார்ந்ததாகச் சிந்தித்துப் பரிசீலித்தே இந்தச் சட்டத்தை உருவாக்கியிருப்பதாக உயர்நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே, இந்தச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் போது எங்களின் நியாயமான பல கோரிக்கைகள் நிறைவேறும் என நம்புகின்றேன் எனத் தெரிவித்தார் வடமாகாணக் கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் மொகமட் ஆலம்.

யாழ். ஊடக அமையத்தில்   நேற்று  செவ்வாய்க்கிழமை( 10-05-2016) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஏற்கனவே நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாடுகளில் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின்  படகுகள் , உபகரணங்கள் விடுவிக்கப்படக் கூடாது. பிடிக்கப்படும் மீனவர்களிடம் நஷ்ட ஈடு கோரப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகளில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்களா ? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட வினாவுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபணையுமில்லை . அவர்கள் மீனவர்கள். வறுமையின் நிமித்தம் கூலிக்காக வருபவர்கள். ஆனால் படகு உரிமையாளர்கள் தெரிந்தே எமது கடல் வளத்தைச் சுரண்டுவதற்காக கடலுக்குத் தமது படகுகளை  அனுப்பி வைக்கிறார்கள், எனவே , அத்துமீறி எமது கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் படகுகள்  பறிமுதல் செய்யப்பட வேண்டும் . இது தொடர்பாக நாங்கள் பல தடவைகள் பத்திரிகையாளர் மாநாடுகளிலும் , ஜனாதிபதியைச் சந்திக்கும் போதும் தெரிவித்திருக்கிறோம்.

இந்திய இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட வேண்டும் . அவ்வாறு கைப்பற்றப்படும் படகுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் . கைது செய்யப்படும் மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், படகு உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அரசு நிர்ணயிக்கும் நஷ்ட ஈட்டைப் படகு உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் வடமாகாணக் கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் மொகமட் ஆலத்துடன் வடமாகாணக் கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளரும், யாழ். மாவட்டக் கடற்தொழிலாளர் சம்மேளனத் தலைவருமான என். வி. சுப்பிரமணியம்   , கிளிநொச்சி மாவட்டச் சமாசத் தலைவர் ஜோசப் பிரான்சிஸ் , முல்லைத் தீவு மாவட்டச் சமாசத் தலைவர் எஸ்.மரியராசா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்

Related posts: