அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே எரிவாயு விநியோகம் – அரசாங்க உத்தரவாத விலையில் சந்தைக்கு அரிசியை வழங்கவும் நடவடிக்கை – துறைசார் அதிகாரிகள் அறிவிப்பு!

Monday, June 20th, 2022

அத்தியாவசிய சேவைகளுக்கான எரிவாயு விநியோகத்தையும் மட்டுப்படுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீட்டு சமையல் எரிவாயு விநியோகமானது தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்கான எரிவாயு விநியோகம் நேற்று (19) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், விரைவில் மேலும் இரண்டு எரிவாயு கப்பல்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது. இந்த கப்பல்களில் ஒன்றிற்கான கட்டணம் அடுத்த இரண்டு நாட்களில் செலுத்தப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம் தாம் உட்பட அனைத்து அரிசி உற்பத்தியாளர்களும் நேற்று (19) முதல் அரசாங்க உத்தரவாத விலையில் சந்தைக்கு அரிசியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரலிய அரிசி நிறுவனத்தின் தலைவர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எத்தகைய பிரச்சினை இருந்தாலும் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு விடுவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனைய அரிசி வியாபாரிகளும் இதே விலையில் அரிசியை வழங்க வேண்டும் என அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அரசாங்கம் அண்மையில் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை அறிவித்தது. இதன்படி, ஒரு கிலோ நாடு அரிசி 220 ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உச்சபட்ச சில்லறை விலையை விடவும் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நாடு முழுவதிலும் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: