அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் – தற்காலிக இன்னல்களுக்காக அரசாங்கம் பொதுமக்களிடம் வருத்தத்தை தெரிவிப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, June 28th, 2022

எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம், துறைமுகங்கள், விவசாயத்துறை மற்றும் ஏற்றுமதி தொழிற்றுறை உள்ளிட்டவற்றுக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதியில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

மக்களின் வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் உள்ள எரிபொருளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிப்பதற்கான வேலைத் திட்டத்திற்காக அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஏனைய செயற்பாடுகளை எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் குறுகிய தூர போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைப்படக் கூடிய நிலை ஏற்படும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு வலயத்திலும் மேல் மாகாணத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் ஏனைய மாகாணங்களின் முக்கிய நகரங்களிலும் உள்ள பாடசாலைகள் ஜூலை 10 வரை மூடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் உரிய கல்வி அதிகாரிகளின் மற்றும் அதிபர்களின் அனுமதியின் கீழ் முன்னெடுக்க முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதேநேரம், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளை தொடர்ந்து வழங்குவதற்கான முறைமை எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதியின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஏற்படும் தற்காலிக இன்னல்களுக்காக அரசாங்கம் பொதுமக்களிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: