அத்தியாவசிய உணவு பொருள் கையிருப்பை உறுதிப்படுத்த கோரி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Saturday, June 12th, 2021

அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் ஆகியவற்றின் கையிருப்பு தொடர்பில் உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும், களஞ்சியப்படுத்துவோரும், விநியோகஸ்த்தர்களும், மொத்த வர்த்தகர்களும் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தரப்பினர், 7 நாட்களுக்குள், நுகர்வோர் அதிகாரசபையில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அந்த அதிகாரசபையின் பதிவின்றி எந்தவொரு அரிசி உற்பத்தியாளர்களுக்கும், நெல் ஆலை உரிமையாளர்களும் இருப்புக்களை வைத்திருக்க முடியாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் சீனி, பால்மா, மற்றும் சோளம் என்பவை தொடர்பான அனைத்து தகவல்களையும் மறைக்காது நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு வழங்கப்பட வேண்டும் என குறித்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்-

நாடு எதிர்கொண்டு அசாதாரண நிலைமையில் மக்களுக்கு சாதாரண விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

அதற்கமைய அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் நுகர்வோரும் பாதிக்காதவகையில் சாதாரண விலையில் பொருட்களை விற்பனை செய்யவும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

இருந்தபோதும் ஒருசில வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை களஞ்சியசாலைகளில் பதுக்கிவைத்துக்கொண்டு விலை அதிகரிப்பை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கின்றது.

அதனால் இந்த நடவடிக்கையை தடுப்பதற்காக, அத்தியாவசிய பொருட்களை தொகையாக வைத்திருக்கும் மொத்த வியாபாரிகள் தங்கள் களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் தொகை தொடர்பில் உண்மை தகவல்களை நுகர்வோர் அதிகாரசபையில் பதிவு செய்யும் வேண்டும் என கருதி வரத்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: