அத்தியாவசிய அரச சேவையாளர்கள் மாத்திரம் பணிக்கு அழைக்கும் நடைமுறை இன்றுமுதல் நடைமுறை!

Thursday, May 26th, 2022

இன்றுமுதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய அரச சேவையாளர்கள் மாத்திரம் பணிக்கு அழைக்கப்படவுள்ளனர்.

இதற்கான சுற்றுநிருபத்தினை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்று வெளியிட்டது.

எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் உருவாகியுள்ள பிரச்சினை காரணமாக பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் உரிய முறையில் செயற்படாதமையால் அரச உத்தியோத்தர்கள் சேவைக்கு சமுகமளிப்பதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன் இந்த நெருக்கடி காலப்பகுதியில் எரிபொருள், மின்சாரம் மற்றும் நீர் என்பவற்றுக்கான அரச செலவுகளை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மீள் அறிவித்தல் வரை அரச நிறுவனங்களினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்களை பணிக்கு அழைப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அரச நிறுவனங்களின் பிரதானிகளின் அனுமதியுடன் அத்தியாவசிய சேவையாளர்களை மாத்திரம் பணிக்கு அழைக்க முடியும். அத்துடன் அத்தியாவசிய அரச சேவைகளைப் பேணுவதற்கு இந்த செயற்பாடு தடையாக இருக்க கூடாது எனவும் குறித்த சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: