அத்தியாவசியப் பொருட்கள் மீது VAT வரி விதிக்கப்படாது

Wednesday, March 9th, 2016
உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகையை ஈடு செய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தில் வரித் திருத்தங்கள் சிலவற்றை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக தெரியவருவதாவது – அரசியலமைப்பு ரீதியான வருமான வரி மற்றும் ஏனைய அனைத்து துறை சார்பாகவும் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 15 வீதத்திற்குப் பதிலாக 17.5 வீத வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் சபையில் தெரிவித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு முதல் மூலதன அதிகரிப்பு வருமானத்தின் மீது வரி அறவிடப்படவில்லை என சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த தசாப்தத்தில் சமூக மேம்பாட்டுடன் ஒப்பிடுகையில் தனியார் மூலதனத்தில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் காணமுடிவதாகவும் தெரிவித்தார். அத்துடன் காணி விலைகளிலும், பங்குகளின் விலைகளிலும் ஏற்பட்ட அதிகரிப்பு இந்த மூலதன வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும் பிரதமர் சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
2015 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் மூலம் வழங்கப்பட்ட நிவாரணங்கள் காரணமாக மொத்த கேள்வியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் கூறினார்.இத்தகைய காரணங்களால் மூலதன வருமானத்தின் மீதான வரியை மீண்டும் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள சிறிய மனிதர்களுக்கு வரியை விதிக்க முடியாதென அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாம் கூறிவந்துள்ளதாகவும், அவ்வாறாயின் பெரிய மனிதர்களும் வரியை செலுத்துவதற்குத் தயாராகவேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
தேச நிர்மாண வரியை 2016 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட யோசனையின் பிரகாரம் 2 வீதத்திலிருந்து 4 வீதமாக உயர்த்துவதற்கு பொருளாதாரத்துடன் தொடர்புடைய சகல தரப்புகளுக்கும் அழுத்தம் விடுக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தகைய பரந்தளவிலான அழுத்தங்களை தடுக்கும் வகையிலும், வியாபார அபிவிருத்தியை பாதுகாக்கும் நோக்கிலும் தற்போது அறவிடப்படும் 2 வீதமான தேச நிர்மாண வரியை மாற்றமின்றி அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.மின்சார விநியோகம், உராய்வு நீக்கி எண்ணெய், தொலைத்தொடர்பாடல் சேவைகளுக்கு வழங்கப்பட்டிருந்த வரி நிவாரணத்தை நீக்குவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகள் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படுவதுடன், காலாண்டிற்காக அறவிடப்படும் 3.75 என்ற வரையறை 3 மில்லியனாக குறைக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
11 வீத தனியான பெறுமதி சேர் வரியை 2016 வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் 8 வீதமாகவும், 12.5 வீதமாகவும் இரண்டு வகைகளாக அறவிடுவதற்கு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உலகின் நிகழ்கால பொருளாதார நிலைமைகள் மற்றும் வரி விதிப்பு வழிமுறைகளில் நிலவும் குறைபாடுகள் காரணமாக 15 வீதமான தனியான பெறுமதி சேர் வரி விகிதத்தை பேணிச் செல்வது மிகவும் பாதுகாப்பான மாற்று வழிமுறையாக அமையும் என்றும் இதன்போது பிரதமர் சபைக்கு தெளிவுபடுத்தினார்.
தொலைத்தொடர்பாடல் சேவைகள், தனியார் கல்வி, தனியார் சுகாதாரம் என்பவற்றிற்கு வழங்கப்பட்டிருந்த வரி நிவாரணம் நீக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இதுதவிர, VAT எனப்படும் பெறுமதி சேர் வரியை அதிகரித்து குறைந்த வருமானம் பெறுவோருக்கு அழுத்தம் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் பிரதமர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்கள் மீது VAT வரி விதிக்கப்படாது எனவும், அத்தியாவசியமற்ற தெரிவு செய்யப்பட்ட மொத்த மற்றும் சில்லறைப் பொருட்கள் சிலவற்றின் மீது மாத்திரம் அந்த வரியை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: