அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகள் தொடர்பில் அந்நிறுவனங்களின் தலைவர்களே உரிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டு – ஜனாதிபதி தெரிவிப்பு!
Saturday, September 18th, 2021மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், காணிப் பதிவு அலுவலகம் போன்ற அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்த ஜனாதிபதி இது தொடர்பில் அந்நிறுவனங்களின் தலைவர்கள், உரிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமையில், வீடியோ தொழில்நுட்பத்தினூடாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புச் செயலணியின் விசேட கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது
மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார வழிகள் என்பன எக்காரணங்கொண்டும் பாதிக்காத வகையில், அத்தியாவசியச் சேவைகளை முன்னர் போன்று தொடந்து முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், அனைத்துப் பொருளாதார மத்திய நிலையங்களையும் தொடர்ந்து திறந்துவைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் 200க்கும் குறைவான மாணவர் கொள்ளளவைக் கொண்டுள்ள கிராமிய பாடசாலைகளைத் திறப்பது தொடர்பிலும், விசேட அவதானம் செலுத்தப்பட்டதுடன் இது விடயத்தில், மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள் அனைவரும், கல்வி அமைச்சுடன் இணைந்துப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து, பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் பற்றிய தெளிவுபடுத்தல்களை வழங்க வேண்டுமென்றும், இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
இதேவேளை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளல் தொடர்பில் பொதுமக்களை ஊக்குவிக்கும் முழுப் பொறுப்பும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு உள்ளதென்று, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவிடம், ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.
அத்துடன், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களில் ஈடுபடுவோர், சுயதொழில்களை மேற்கொள்வோர், எவ்வித தடையுமின்றி தமது வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் பொறுப்பென்று, ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நிலவும் சவால்மிக்க நிலைமைக்கு மத்தியிலும், ஆண்டின் முதலாவது மற்றும் இரண்டாவது காலாண்டுகளில், நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் வேகத்தை உயர்ந்தபட்சத்தில் பேண முடிந்துள்ளது எனக் கூறிய நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அவர்கள், அதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதார, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் துறையினருக்கும் தமது நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|