அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு – சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் காயம்!

Friday, April 16th, 2021

யாழ்ப்பாணம்  பருத்தித்துறை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கெப் ஒன்றை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் இடம்பெறும் மணல் கொள்ளையை தடுப்பதற்காக அதிரடிப்படையின் சோதனைச் சாவடியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் அப்பகுதியின் ஊடாக பயணித்த கெப் வாகனம் ஒன்றை நிறுத்துமாறு அதிரடிப்படை அதிகாரிகள் சமிக்ஞை செய்துள்ளனர்.

எனினும், குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றதால், டயர்களில் காற்றை இழக்கச்செய்யும் செயற்கை முள் கருவிகளை வீதியில் இட்டுள்ளனர்.

இதனையடுத்து, கெப்பின் டயர்களில் காற்று வெளியேறியுள்ளது. அதன்பின்னர், கெப் தொடர்ந்தும் பயணித்ததுடன் சோதனை சாவடியில் இருந்த அதிகாரிகளையும் மோதிச்செல்ல முயன்றதையடுத்து அதிரடிப்படையினர் கெப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும், கெப் பழுதடைந்த டயர்களுடன் தப்பிச்சென்றுள்ளது.

சிறிது நேரத்தின் பின்னர், இருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 23 மற்றும் 26 வயதான இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் கெப் வாகனத்தில் பயணித்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான கெப் வாகனத்தை தேடி பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: