அதிபர், ஆசிரியர் ஆலோசனை, ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Saturday, January 15th, 2022

இலங்கை அதிபர், ஆசிரியர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவை ஆகியவற்றை மூன்றும் மூடப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேராவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அகப்படுத்தப்பட்ட சேவை அறிவித்தலானது, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதிமுதல் அமுலாகுவதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட ஏனைய நிறுவன நடவடிக்கை தொடர்பான அதிகாரங்கள் மற்றும் ஏற்பாடுகள், அந்தந்த சேவைகளுக்காக தற்போது அமுலில் உள்ளவாறு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சேவைகளுக்கான விசேட வேதன முறைமை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வினவி, பொருத்தமான வகையில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை

அதிபர், ஆசிரியர் ஆலோசகர் சேவை, ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தியமை தமது போராட்டத்தின் வெற்றி என ஆசிரியர் சங்கங்ம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அந்த போராட்டத்திற்கு பங்களித்த அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையை நாசப்படுத்த பலர் முயற்சித்து தமது போராட்டத்தை நிறுத்தியதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையின் மூலம், அடிப்படை சம்பள உயர்வை வெற்றிகரமாக பெற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு அவர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

அதிபர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் சேவையில் உள்ளவர்களின் தரத்திற்கு ஏற்ப அடிப்படை சம்பளங்களும் அதிகரிக்கப்படும் எனவும் மஹிந்த ஜயசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: