அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுகளில் 45 வழக்குகள் தாக்கல் – யாழ்.மாவட்ட செயலகம் தெரிவிப்பு!

Wednesday, September 8th, 2021

யாழ்மாவட்டத்தில் கொரோனா தொற்றுநிலைமை குறைந்து செல்லும் நிலையை காட்டியிருந்த போதிலும் கடந்த சில நாள்களாக அதன் தாக்கம் சற்று ஏற்ற இறக்கமாக  காணப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் – நேற்று மாலை 4 மணிக்கு பிற்பாடு கிடைத்த தரவின்  அடிப்படையிலே மொத்தமாக 248 நபர்கள் மேலதிகமாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள். அத்துடன் யாழ் மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 192  பேர் குறித்த தொற்றுடன் இன்றுவரை இனங்காணப்பட்டுள்ளார்கள்

அதேநேரம் 281 இறப்புக்களும் பதிவாகியுள்ளன. இதேவேளை இன்றுவரை தொற்றாளர்களுடன் தொடர்பு கொண்ட வகையிலே 5 ஆயிரத்து 384 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்

மருதங்கேணியில் 3 கிராமசவகர் பிரிவும் வேலணையில் ஒரு கிராமசேவகர் பிரிவுமாக  4 கிராமங்கள் தற்போது முடக்கத்தில் உள்ளன.

இந்நிலையில் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

அத்துடன் 60 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி பெறுவதில் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே 60 வயதிற்கு மேற்பட்டவர்களின்  இறப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டாது தங்களுக்குரிய தடுப்பூசியைப் போடுவதன் மூலம் இறப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்

அத்தோடு அடுத்த கட்டமாக 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தினை  விரைவாக ஆரம்பிக்க எண்ணியுள்ளோம்

பொது முடக்கத்திலும் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை அனுசரித்து நடந்து கொள்ளாமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனவே பொதுமக்கள் தற்போதுள்ள பொது முடக்கத்தை துஸ்பிரயோகம் செய்யாது சுகாதார  நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதன் மூலம் இறப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் அவசியமற்று வீதிகளில் நடமாடாது வீடுகளில் இருத்தல்  சிறந்ததாகும்.

இதனிடையே

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்றல் காலாவதியான பொருட்களை விற்றல் போன்ற குற்றச்சாட்டுகளில் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக 45 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன இருந்தபோதிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக நீதிமன்ற  நடைமுறையில் சற்று தாமதம் காணப்படுகின்றது

இருந்தபோதிலும் தொடர்ச்சியாக பாவனையாளர் அதிகார சபையினால் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சோதனை  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது

அதனுடன் இணைந்த வகையிலே நிறுத்தல் மற்றும் அளவைகள் திணைக்களமும் இந்த சந்தர்ப்பத்திலும் தங்களுடைய பணியாளர்களை களப் பணியில் ஈடுபடுத்தி பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது

மேலும் நடைபாதை வியாபார நிலையங்களையும் நடமாடும் வண்டிகளையும் பரிசோதனை செய்யவுள்ளார்கள். எனவே வியாபாரிகள் மிகவும் விழிப்புணர்வுடன் பொதுமக்களுக்கு சகாய விலையில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் அதிக விலைக்கு விற்பனை செய்து கண்டுபிடிக்கப்பட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்தோடு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையுடன் இணைந்த வகையில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவில் 5 பட்டதாரி பயிலுனர்களுடன் இணைந்து  இந்த பரிசோதனை அறிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது

குறிப்பாக சீனி, அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான விற்பனை நிலை தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது நேற்றையதினத்தில் இருந்து மிகவும் இறுக்கமான முறையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: