அதிக முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அனுமதிப்பத்திரம் இல்லை – வீதி பாதுகாப்பு தேசிய சபை!

Tuesday, May 10th, 2016

நாட்டில் 40 வீதமான முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு  சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவும் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் கலாநிதி சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பத்து இலட்சத்துக்கும் அதிக முச்சக்கரவண்டிகள் காணப்படுவதாகவும் குறிப்பாக தற்போது இடம்பெறும் வாகன விபத்துக்களில் அதிகமானவை முச்சக்கர வண்டி விபத்துக்கள் எனவும், 18 வயதுக்கு குறைந்தவர்களே இவ்வாறான விபத்துக்களின் போது முச்சக்கர வண்டிகளை செலுத்தியுள்ளதாகவும் கலாநிதி சிசிர கோத்தாகொட குறிப்பிட்டுள்ளார்.

தவணை முறை கொடுப்பனவில் அதிகமாக முச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்யப்படுவதாலும், இளமை பருவத்தில் காணப்படும் துடிப்புத்தணத்துடன், 18 க்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அதிகளவில் முச்சக்கர வண்டிகளை செலுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் சாரதி அனுமதிப் பத்திரமின்றியும், வீதி போக்குவரத்து தொடர்பான எவ்வித தெளிவும் இன்றி வாகனங்களை செலுத்துவதாகவும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த புதிய கலாசாரத்தை தடுக்கும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாகவும், விரைவில் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் டொக்கடர் சிசிர கோத்தாகொட குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானவர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் கலாநிதி சிசிர கோத்தாகொட கூறியுள்ளார்

Related posts: