அண்ணன் அடித்துக் கொலை: தம்பி தற்கொலை குடிபோதையால் வந்த பரிதாபம்!

Wednesday, October 4th, 2017

ஒன்றாய்ச் சேர்ந்து மது அருந்திய நண்பர்கள் மூவருக்கிடையில் இடம் பெற்ற மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந் நிலையில் அடித்துக் கொல்லப்பட்டவரின் தம்பியும் அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். குறித்த இரு மரணங்களும் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மற்றும் மீசாலைப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

நண்பர்கள் தாக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த 34 வயதான பாலசூரியன் யசோதரன் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மரணமடைந்தார்.இந் நிலையில் அண்ணன் இறந்த தகவல் கேட்டு துக்கத்தில் இருந்த அவரது தம்பியார் நேற்று செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சோக சம்பவங்கள் குறித்து மேலும் தெரிய வருவதாவது –

கடந்த மாதம் 25 ஆம் திகதி அடித்துக் கொல்லப்பட்ட யசோதரன் வீட்டில் அவருடன் இணைந்து இரண்டு நண்பர்கள் மது அருந்தியுள்ளனர்.

காலையில் இருந்து இரவு வரை மது விருந்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் வேலைக்காக வெளியே சென்ற யசோதரன் மனைவி இரவு வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் தகராறு இடம்பெற்றுள்ளது.

இந்தத் தகராற்றை அடுத்து நண்பர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். நண்பர்கள் சென்ற பின்னர் மனைவியை யசோதரன் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் மனைவி காயமடைந்தார். இதனையடுத்து இத் தம்பதியினரின் மூத்த மகன் தாயை அழைத்துச் சென்று அக்கராயன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந் நிலையில் வெளியே சென்ற யசோதரனின் இரண்டு நண்பர்களும் இரவு 7 மணியளவில் மீண்டும் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். இதன் போது அவர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலின் போது மது போதையில் இருந்த இரண்டு நண்பர்கள் இணைந்து சக நண்பனான யசோதரனை தாக்கியதாக தெரியவருகிறது. இவர்களுக்கு இடையே மோதல் நடந்ததை அயலவர்கள் அவதானித்துள்ளனர்.

 நண்பர்களின் தாக்குதலில் யசோதரன் படுகாயமடைந்தார். இந் நிலையில் பயந்து போன நண்பர்கள் இருவரும் இணைந்து யசோதரனை அக்கராயன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். இதனை அக்கராயன் மருத்துவமனையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த யசோதரன் மனைவி கண்டுள்ளார். இதனையடுத்து நண்பர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

  இந் நிலையில் அக்கராயன் மருத்துவமனையில் இருந்து யசோதரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மரணமடைந்தார். இத் தகவலை அறிந்து மீசாலையில் திருமணம் முடித்து வசித்து வரும் அவரது தம்பி கவலையில் இருந்ததாகத் தெரியவருகின்றது.

இந் நிலையில் நேற்று செவ்வாயக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மது போதையால் ஏற்பட்ட வினையில் அண்ணன் இறந்தமை அதனைக் கேள்வியுற்று மறுநாளே தம்பியாரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பெரும் துயரத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் யசோதரனை தாக்கிய அவரது நண்பர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளதாக தெரியவருகிறது. இவர்களைத் தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் இறந்த யசோதரனின் மரண விசாரணையை வைத்தியசாலை திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts: