அணு ஆயுதங்கள் கிடைக்காது – டிரம்ப் உறுதி!

Friday, January 10th, 2020

2015 ஆம் ஆண்டு இரானுடன் 6 வளர்ந்த நாடுகள் செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தை ஐரோப்பிய நாடுகளும், பிற நாடுகளும் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்.

ஈரான் தளபதி காசெம் சுலேமானியை இராக்கில் வைத்து அமெரிக்கா படுகொலை செய்தது, அதைத் தொடர்ந்து இன்று ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது இரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் ஆகியவற்றின் பின்னணியில் டிரம்ப் செய்தியாளர்களிடம் உரையாற்றியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா ஏற்கெனவே வெளியேறிவிட்டது.

உலக சக்திகள் புதிய ஒப்பந்தத்துக்குப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று தெரிவித்தார் அவர். நேட்டோ நாடுகளை மேலும் அதிகமாக மத்திய கிழக்கில் ஈடுபாடு காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஈரானுக்கு தண்டனை அளிக்கும் வகையில் மேலும் அதிக தடைகள் விதிக்கப்படும் என்று குறிப்பிட்ட டிரம்ப், ஏற்கெனவே அமெரிக்கா விதித்த தடைகளால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது ஈரான் என்றார்.

அமெரிக்கப் படைகள் எதற்கும் தயாராக இருப்பதாக குறிப்பிட்ட டிரம்ப், ஈரான் கரம் தாழ்ந்திருக்கிறது என்றும் அது சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு நல்லது, உலகத்துக்கு நல்லது என்றும் கூறினார்.

பயங்கரவாதத்துக்கான முன்னணி ஆதரவாளராக மாறியுள்ள ஈரான் நாகரிக உலகத்துக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டார். ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts: