அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்!

Thursday, April 13th, 2017

தமக்கான நிரந்தர அரசாங்க வேலைவாய்ப்பை உடனடியாக வழங்குமாறு கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று  (12) அடையாள உண்ணாவிரதப் போராட்ட ஒன்றை மேற்கொண்டனர்.

காலை-09 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை இந்தப் போராட்டம் நீர், ஆகாரம் எதுவுமின்றி முன்னெடுக்கப்பட்டது. குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் 80 வரையான வேலையற்ற பட்டதாரிகள் சுலோகங்கள் ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

கடந்த ஒன்றரை மாத காலமாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதும் தமக்கான பொருத்தமான தீர்வுகளை மத்திய, மாகாண அரசாங்கங்கள் முன்வைக்காமை தொடர்பில் போராட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரிகள் கடும் விசனம் வெளியிட்டனர்.

குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் கடந்த ஒன்றரை மாத காலமாகத் தீர்வு கோரித் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். எமக்குரிய சரியான பதில் எதுவும் இதுவரை பெற்றுத் தரப்படாத காரணத்தால் தான் நாம் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். இதன் பின்னரும் மத்திய, மாகாண அரசாங்கங்கள் எமது பிரச்சினையைக் கருத்தில் கொள்ளாதிருப்பது முறையல்ல.

வடமாகாண ஆளுநர், வட மாகாண சபை ஆகியோரிடம் சென்று எங்கள் பிரச்சினையை முறையிட்ட போது அவர்கள் கால அவகாசம் கோரியிருந்தார்கள். நாங்கள் அவர்களுக்குக் கால அவகாசம்  வழங்கியிருந்தோம். எனினும், இதுவரை உரிய பதில் எதுவும் வழங்கப் படவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர்.

Related posts:

ஜ. நா. அமைப்பின் சகல நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுவோம் - வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர...
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நந்தகுமாரன் தற்கா...
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளமையால் ஒட்சிசன் தேவை மீண்டும் அதிகரிப்பு - வைத்தியர...