அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பால் உற்பதத்தி மேம்படுத்தப்படும் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, August 19th, 2020

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்நாட்டின் பால் உற்பத்தியை நாட்டின் பால் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மேம்படுத்துவதாகவும், அதை நுகர்வுக்கு அப்பால் ஏற்றுமதி மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்தின் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பால் உற்பத்தித்துறையுடன் தொடர்புடைய அமைச்சர்கள் உள்ளிட்ட அத்துறை சார்ந்த அரச நிறுவன தலைவர்களுடன் அலரி மாளிகையில் 17 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி செயலணி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதுடன், அதன்படி உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பாரியளவிலான பால் பண்ணைகள் மற்றும் சிறிய அளவிலான பால் பண்ணைகளை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் பால் தேவை 1200 மில்லியன் லீட்டராகும். தற்போது உற்பத்தி செய்யப்படும் பாலின் அளவு 420 மில்லியன் லீட்டராகும். எஞ்சிய தேவையான பாலின் அளவு 780 மில்லியன் லீட்டர் என்ற போதிலும், திரவப் பால் பயன்பாட்டிற்கு மக்களை பழக்கப்படுத்தினால், மேலும் 400 மில்லியன் லீட்டர் பாலை கொண்டு உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். 1 கிலோகிராம் பால் மாவை உற்பத்தி செய்வதற்கு சுமார் 8 லீட்டர் திரவ பால் தேவைப்படுகிறது. அதன்படி, 1 கிலோகிராம் பால் மாவிலிருந்து தயாரிக்கக்கூடிய பால் கோப்பைகளின் அளவை விட 8 லீட்டர் திரவ பாலில் இருந்து தயாரிக்கக்கூடிய பால் கோப்பைகளின் அளவு மிக அதிகம்.

பால் விலை, பால் பசுக்களை இறக்குமதி செய்தல், புல்வெளிகளைப் பாதுகாத்தல், மக்காச்சோளம் சாகுபடி செய்தல் மற்றும் அதற்கான நிலம் ஒதுக்கீடு செய்தல், மக்காச்சோளம் சாகுபடியின் வெற்றிக்கு பயனுள்ள விதைகளை இறக்குமதி செய்து உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மக்காச்சோளத்தின் உற்பத்தித்திறனை ஒரு ஹெக்டேயருக்கு 3.8 மெட்ரிக் டொன்னிலிருந்து 7 மெட்ரிக் டொன் வரை உயர்த்த வேண்டும்.

அதன்படி, எதிர்வரும் பருவத்தில் பால் பண்ணையாளர்களுக்கு அவசியமான மக்காச்சோளம் பயிரிடத் தேவையான நிலங்களை விடுவிப்பது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: