அடுத்த 20-30 வருடங்களைப் பற்றி சிந்தித்து இப்போதே செயற்பட வேண்டும் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!

Tuesday, November 1st, 2022

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த 20-30 வருடங்கள் பற்றி சிந்தித்து இப்போதே செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

உலக நகர தினத்தை முன்னிட்டு கோட்டே கொடுபெம்ம ஈரநில பூங்காவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலக நகர தினத்தை முன்னிட்டு, துவிச்சக்கர வண்டியில் வேலைக்குச் செல்லும் வேலைத்திட்டமொன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தலைமையில் பெலவத்தை புத்ததாச விளையாட்டரங்கிற்கு அருகில் நடைபெற்றது..

குறித்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

“கோட்டே, கொட்டுபெம்ம ஈர நிலப் பூங்கா இயந்திரங்கள் இன்றி மனித உழைப்பை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சதுப்பு நில பூங்கா உருவாக்கப்பட்டது. சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத இந்தப் பூங்கா எதிர்காலத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்களின் படிப்புக்கு உதவியாக அமையும்.எனவே இது மிகவும் முக்கியமான பெறுமதி வாய்ந்த திட்டமாகும். இதற்கு உலக வங்கி நிதி வழங்கியுள்ளது.

நமது நாடு பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடியை சந்தித்து வரும் சூழ்நிலையில் உலக நகரங்கள் தினத்தை கொண்டாடி வருகிறோம்.அதனால் இந்த நிகழ்வை மிக எளிமையாக ஏற்பாடு செய்தோம்.ஆனால் இது விலைமதிப்பற்ற மற்றும் பெறுமதி வாய்ந்த திட்டமாகும். இத்திட்டமானது. இது கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். ஆதலால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் , அமைச்சர்கள் மாறினாலும் மக்களுக்குப் பயன்படும் இது போன்ற திட்டங்களை நிறுத்தப்படக் கூடாது என நினைக்கிறேன். இந்தத் திட்டத்தைத் தொடங்கிய எனக்கு முன் இருந்த அமைச்சர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில் கொழும்பு மீத்தொட்டமுல்ல குப்பை மேடு இடிந்து விழுந்து பல உயிர்களை இழந்ததுடன், பல சுற்றாடல் பிரச்சினைகளும் எழுந்தன.நகரங்கள் சரியாக திட்டமிடப்படாததால் தான் இதுபோன்ற அவலங்கள் ஏற்படுகின்றன. முறையாக நகர அமைப்பை திட்டமிடுவதன் மூலம் இதுபோன்ற அவலங்களை தடுக்க முடியும்.

தற்போது உலகில் கிராமப்புறங்கள் குறைந்து நகர்ப்புறங்கள் அதிகரித்து வருகின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வார்கள். அதற்கு ஏற்ப நகரத்தை தயார்படுத்துவது நமது பொறுப்பு.அடுத்த 20-30 ஆண்டுகளைப் பற்றிச் சிந்தித்து அவசரமாக இதற்கான வேலைத்திட்டத்தை அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு உருவாக்க வேண்டும்.எதிர்காலத்தில் பல நகர திட்டங்களை வர்த்தமானி மூலம் வெளியிட தயாராகி வருகிறோம்.அதன்படி கொழும்பு மாத்திரமல்ல ஏனைய நகரங்களையும் திட்டமிட்ட வகையில் அபிவிருத்தி செய்ய முடியும்.

இவ்வாறான பணிகளில் பல்வேறு நபர்களிடமிருந்து பல அழுத்தங்கள் காணப்படுவதாகவும், முக்கிய விடயங்களில் நான் ஒருபோதும் அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும், எனவே தமது அமைச்சின் அதிகாரிகள் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் முக்கிய விடயங்களில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

000

Related posts:

அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தல் அதனை சீர்திருத்தம் செய்தல் ஆகிய சந்தர்ப்பங்களுக்கு மாத்திரமே நாட...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கருப்புப் பெட்டி மீட்பு - எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு சர்வதே...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய கடன் - எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ...