அடுத்த வருடம்முதல் அனைத்து நிறுவனங்களும் இலாபமீட்டும் நிறுவனங்களாக உருவாக்கப்பட வேண்டும் – துறைசார் தரப்பினரிடம் பிரதமர் வலியுறுத்து!
Saturday, November 27th, 2021நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதன் மூலம் அரச நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
சகல அரச நிறுவனங்களும் அடுத்த ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அடுத்த ஆண்டில் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவது தொடர்பில் அனைத்து அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும். சவாலான காலங்களில் பணிகளை இடைநிறுத்த இடமளிக்கக் கூடாது எனத் தெரிவித்த பிரதமர், பேச்சுவார்த்தை மூலம் தேவையான முடிவுகளை துரிதப்படுத்தி உரிய பணிகளை சட்டப்படி முறையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
‘நிறுவனங்கள் இணைந்து முன்னெடுக்கும் திட்டங்களில் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து நிறுவனங்களின் ஆதரவைப் வழங்குவது அவசியமாகும். சந்தையில் டைல்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்ட போது அரச நிறுவனங்கள் செயற்பட்ட விதத்திலேயே சீமெந்து மற்றும் கம்பிகளை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கட்டுமானத்திற்காக இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். சரியான தரமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்களுக்கு வழிகாட்டுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட பொறுப்பற்ற நடவடிக்கையால் நட்டமடையும் நிலைக்கு தள்ளப்பட்ட அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டும் நிலைக்கு வந்துள்ளமையும் இதன்போது தெரியப்படுத்தப்பட்டது.
அதுமாத்திரமன்றி நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பற்ற பொருள் விநியோகம் காரணமாக நட்டத்தில் இயங்கிய கட்டிடப் பொடள்கள் கூட்டுத்தாபனம் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரான பிரதமர், இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் அர்ப்பணிப்புடன் இன்று இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியிருப்பதும் வெளிப்படுத்தப்பட்டது.
கடந்த அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டமையால் திறைசேரியின் ஊடாக சம்பளம் வழங்கப்பட்டு வந்த பல நிறுவனங்கள், தற்போது திறைசேரிக்கு சுமையாக அன்றி இலாபம் ஈட்டி வருவதாக நிறுவனத் தலைவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.
Related posts:
|
|