அடுத்த மூன்று வருடங்கள் என்னோடு முழுமையாக ஒத்துழையுங்கள் – அரச துறையினரை உரிமையோடு அழைப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக – அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு குழுவாகச் செயற்பட வேண்டியது அவசியமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, ஏற்படும் முன்னேற்றங்களில் பங்கெடுக்க முனைவதைப் போலவே, ஏற்படும் பின்னடைவுகளையும், ஒரு குழுவாக எதிர்கொள்வதே கூட்டுப் பொறுப்பாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அவ்வாறு செய்யாமல், குறைகளை மட்டும் விமர்சிப்பது என்பது, அவ்வாறு விமர்சிப்பவரின் திறமையின்மையையே வெளிக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இழந்த இரண்டு வருடங்களைப் பற்றிச் சிந்தித்து வருந்திக்கொண்டு இருக்காமல், உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றேன்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவை அங்கீகாரம் உள்ள அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறார்கள்.

எவ்வாறாயினும், அரசமைப்பின் மூலம் வழங்கக்கூடிய 30 அமைச்சுப் பொறுப்புகளுக்கு மேலதிகமாக எந்த ஒர் அமைச்சுப் பொறுப்பையும் எவருக்கும் வழங்கி – மக்களுக்கு நான் ஏற்கெனவே வழங்கிய வாக்குறுதியை மீறப் போவதில்லை.

அதே வேளை – மக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு உதவுவதே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதே போலவே – தீர்மானங்களை எடுக்கும்போது, எவ்வாறு செயற்பட்டு வேலைகளை முடிக்க வேண்டும் என்பதை மட்டுமே அரச அதிகாரிகள் பார்க்க வேண்டுமே அல்லாமல், சுற்றறிக்கைகளில் உள்ள பலவீனங்களைத் தேடிப்பிடித்து – எவ்வாறு வேலை செய்யாது இருக்கலாம் என்பதைப் பார்க்கக் கூடாது.

அந்தவகையில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு, எனக்கு உங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு, அனைத்து அரச ஊழியர்களுக்கும் நான் உரிமையோடு அழைப்பு விடுக்கின்றேன்.

மக்களுக்கான வலுவான அரச சேவையை உருவாக்குவதற்காக, விரைவில் அரச நிறுவனங்களுக்கு நான் நேரில் சென்று பார்வையிடவுள்ளேன்.

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சித்திட்டமும், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு மக்களின் அபிலாஷைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: