அடித்து கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள – பிரேத பரிசோதனையில் வெளிவந்தது உண்மை!

Saturday, May 14th, 2022

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கி உயிரிழந்த நிலையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களிடையே சிக்கிக் கொண்டுள்ள நிலையில், தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடந்த 9 ஆம் திகதி மாலை சம்பவம் இடம்பெற்றதும் தகவல்கள் வெளியானது.

இருந்த போதும் பிரேத பரிசோதனை அறிக்கை பிரகாரம், கடுமையாக தாக்கப்பட்டமையால் எலும்புகள் சிதைவடைந்து உள்ளக இரத்தக் கசிவு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்தனகல்ல ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி ரொமேஷ் அழகியவண்ண முன்னெடுத்த பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது அவருடன் இருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக் காயத்தினால் உயிரிழந்துள்ளதாகவும், அவரது உடலில் தோட்டா ஒன்று காணப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரியும் கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும், இதனால் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரோ தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், மாறாக கடுமையான தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts:


பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புச் சேவை நவீன தொழில்நுட்பத்துடன் சமூக ஊடகங்களுக்கு மாற்றம்.
அமரர் சிவஞானசுந்தர ஐயா அவர்களது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை! ...
ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இணைந்து பொருளாதார சபையொன்றை நிறுவுவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன முன்மொழ...