அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுங்கள் – தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, November 13th, 2020

உலகமெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகையை, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

நாளையதினம் உலகமெங்கிலும் உள்ள இந்துக்கள் தீபாவளித் தினத்தை கொண்டாடவுள்ளனர். இந் நிலையில் அதனை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் –

தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது அனைத்து உள்ளங்களிலும் இருள் நீங்குவதுடன், தாம் ஒளிபெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான பிரார்த்தனையுடன், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறி – அன்பையும் மகிழ்ச்சியையும் அவர்கள் தமக்குள் பகிர்ந்துகொள்ளும் கலாசார விழா என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்த வகையில் – இன மற்றும் சமய நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மனிதர்களிடையே மேம்படுத்துவதற்கு இத்தகைய இறை நம்பிக்கை சார் விழாக்கள் பெரிதும் உதவும் என்பது எனது நம்பிக்கையாகும்.

முழு உலகமும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு பாரிய பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்துள்ள இச்சந்தர்ப்பத்தில் – வழிபாட்டுக் கிரியைகளில் ஈடுபடுவது மனித உள்ளங்களுக்கு அமைதியை தருகின்றது.

இந்த தீபத் திருநாளில், அந்த அமைதிக்காக, எமது நாட்டிலும் உலகமெங்கிலும் வாழும் அனைத்து இந்துக்களும் ஒருமனதாக கடவுளுக்காக அர்ப்பணிப்புகளைச் செய்வர் என்பது எனது நம்பிக்கையாகும்.

அது சிறந்ததோர் சமூகத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் கட்டியெழுப்பும் எமது நோக்கத்திற்கும் ஆசீர்வாதமாக அமையும் என்றே நான் எண்ணுகின்றேன்.

இந்த தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும், அவர்கள் எதிர்பார்க்கும் உள அமைதி கிடைக்க, எனது பிரார்த்திக்கின்றேன் என்று அவருடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: