அச்செழு பாடசாலையில் அரசியல் தலையீடு: 18 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் கோரி வலயக்கல்விப் பணிமனையை நோக்கிப் படையெடுப்பு!
Thursday, August 27th, 2020அச்செழு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் நிர்வாகத்தில் அரசியல் கட்சியொன்றின் தலையீடு காரணமாக அங்கு கல்வி கற்பிக்கும் சுமார் 18 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் வழங்குமாறு யாழ் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –
அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் அதிபராக இருந்தவரை மாற்றி பிரதி அதிபரை அதிபராக்குமாறு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட பெரும்பான்மை தேசிய அரசியல் கட்சியொன்றின் உறுப்பினரிடம் அப்பாடசாலை விருத்திச் சங்கம் சார்பில் ஒருவர் நாடியுள்ளார் .
இவ்வாறு தமது கோரிக்கையை குறித்த கட்சி ஏற்குமானால் தமது கிராமத்தில் கணிசமான வாக்குகளை குறித்த கட்சிக்கு தருவதாக பேரம் பேசப்பட்டதிற்கிணங்க குறித்த கட்சியினால் உத்தரவாதம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .
அதனடிப்படையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்ற நிலையில் அதிபர் மாற்றப்பட்டது. அங்கு கடமையாற்றும் பிரதி அதிபர் தானே அதிபர் என்ற நினைப்புடன் ஆசிரியர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் என ஆசிரியர் தரப்பால் கவலை தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பிரதி அதிபர் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில் அப்பாடசாலையில் விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிறிதொரு அரசியல்வாதியிடம் சுமார் 5 இலட்சம் ரூபா வரையான நிதியை பெற்று பாடசாலை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந் நடவடிக்கை முறையாக இடம்பெறாமல் குறித்த நிதி பிரதி அதிபர் மற்றும் கட்சி சார்ந்த ஆதரவாளர்களால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிதிக்கு என்ன இடம்பெற்றது என்பது குறித்து அறிய முடியாதுள்ள நிலையில் குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பிரதி அதிபரின் சர்வாதிகாரமான செயற்பாட்டுக்கு ஆளாகிய நிலையில் பாடசாலையில் இருந்து விடுவித்து தருமாறு வலயக்கல்விப் பணிமனையை நோக்கிப் படையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|