அச்சுறுத்திய மாண்டஸ் கரையை கடந்தது – இலங்கையிலும் அதிகளவில் தாக்கம்!

Saturday, December 10th, 2022

சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது.

இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் உட்பட சில இடங்களில் கடும் மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 7 செ.மீ. என்ற அளவில் கனமழை பதிவாகியிருந்தது.

நேற்று காலை தீவிர புயல், மீண்டும் புயலாக வலுவிழந்தது. அத்துடன் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்க ஆரம்பித்தது.

புயலின் பின்பகுதி இன்னும் சில மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

புயல் கரையை கடந்த நிலையிலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் இந்த புயல் தாக்கம் காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழையுடன் பெய்யும்.

அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் 2.5 மீற்றர் முதல் 3.5 மீற்றர் வரை அலைகள் எழக்கூடும்.

கரையோர கடற்பரப்புகளில் அலைகள் 2.0 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை வட மாகாணத்தில் தற்போது நிலவும் குளிரான வானிலை காரணமாக 500இற்கும் மேற்பட்ட கால்நடைகள் மரணித்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் பொருளாளர், வைத்தியர் எஸ். சுகீர்தன் இதனை எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

இதனை கட்டுப்படுத்துவதற்கு தீவறைகளை ஏற்படுத்தி கால்நடைகளுக்கு வெப்பத்தை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

000

Related posts: