900 ஏக்கர் நிலத்தில் இம்முறை சிறுபோகம்!

இரணைமடுக்குளத்தின் நீரைப்பயன்படுத்தி இவ்வாண்டு 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சி கோவிந்தன் கடைச்சந்தியில் அமைந்துள்ள இரணைமடுத்திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
நீரைச் சிக்கனமாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்தி வெற்றிகரமான விவசாயச் செய்கையை மேற்கொள்வதென்றும் குளத்தின் நீரைக் கொண்டு 900 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகப்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும். அந்தப் பயிர்ச்செய்கையை இரணைமடுக் குளத்தின் கீழான பன்னங்கண்டி கமக்கார அமைப்பின் கீழ் உள்ள பயிர்ச்செய்கை நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரமளவில் மாவட்ட செயலர் தலைமையில் எடுக்கப்படவுள்ளதாக இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 36 அடி நீர்கொள்ளளவைக் கொண்ட கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 16 அடி மூன்று அங்குலமாகக் காணப்படுகின்றது.
இதில் பத்து அடி வரையான தண்ணீரைக் குளத்தின் பாதுகாப்புக்கருதி தேக்கி வைப்பது எனவும் ஏனைய நீரைப் பயன்படுத்தி சிறுபோகச்செய்கை மேற்கொள்வதாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
இதில் இரணைமடு விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|