8 மொழிகளில் தமிழ் மட்டும் இல்லை – பிமல் ரட்னாயக்க எம்.பி!
Friday, December 2nd, 2016
அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு இலங்கையில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தொடர்பிலான தகவல் ஒன்றை ஜே.வி.பி.எம்.பி பிமல் ரட்னாயக்க சபையில் வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே பிமல் ரட்னாயக்க எம்.பி தமிழ்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தொடர்பிலான தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அண்மையில் கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள பிரபல வைத்தியசாலையொன்றுக்கு சென்றேன். அந்த வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருபவர்களில் அதிகளவானோர் தமிழர்கள். நான் வைத்தியசாலையின் உள்ளே சென்று சில இடங்களைப் பார்த்தபோது நோயாளர்கள் மற்றும் உறவினர்களின் நன்மை கருதி 8 மொழிகளில் அறிவிப்புகளை எழுதியிருந்தனர்.
எனக்கு ஆச்சர்யம். எங்கும் இல்லாத வகையில் 8 மொழிகளில் அறிவிப்புகளை விடுத்துள்ளார்களே எனப் பார்த்தபோது அந்த 8 மொழிகளில் தமிழ் மொழி மட்டும் இல்லாதிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
8 மொழிகாரர்களின் உரிமைகளை மதிக்கும் அந்த வைத்தியசாலை தமிழை மட்டும் புறக்கணித்திருந்தது. இதுதான் தமிழ் மொழியின் இன்றையநிலை. அரச அலுவலகங்கள், திணைக்களங்களில் தமிழ் மொழியை அமுலாக்கினால் மட்டும் போதாது தனியார் நிறுவனங்களிலும் தமிழ் மொழி அமுலாக்கம் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் – என்றார்.
Related posts:
|
|