7 ஆண்டுகளில் மாநகரசபைக் காணி மூலம் ரூ.10 லட்சம் வருமானம்!

நகரில் உள்ள சுப்பிர மணியம் பூங்காவுக்கு எதிரில் உள்ள யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான காணியை கடந்த 7 ஆண்டுகளில் வாடகைக்கு வழங்கியதன் மூலம் 10 இலட்சத்து 48 ஆயிரத்து 380 ரூபா வருமானமாகக் கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான காணியை, 2010 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி வரை வாடகைக்கு வழங்கியதன் ஊடாக மாநகர சபை பெற்றுக் கொண்ட வருமானத்தை அறியத் தருமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்குப் பதில் வழங்கியுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபை, 2010 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் வாடகைக்கு வழங்கவில்லை. 2011 ஆம் ஆண்டு 3 தடவைகள் வாடகைக்கு வழங்கியதன் ஊடாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவும், 2012 ஆம் ஆண்டு 6 தடவைகள் வாடகைக்கு வழங்கியதன் ஊடாக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாவும், 2014 ஆம் ஆண்டு 4 தடவைகள் வாடகைக்கு வழங்கியதன் ஊடாக 9 ஆயிரத்து 500 ரூபாவும், 2015 ஆம் ஆண்டு 17 தடவைகள் வாடகைக்கு வழங்கியதன் ஊடாக 2 லட்சத்து 93 ஆயிரத்து 800 ரூபாவும், 2016 ஆம் ஆண்டு 23 தடவைகள் வாடகைக்கு கொடுத்தன் ஊடாக 3 லட்சத்து 53 ஆயிரத்து 280 ரூபாவும், 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் 8 தடவைகள் வாடகைக்குக் கொடுக்கப்பட்டு 46 ஆயிரத்து 800 ரூபாவும் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாகப் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பாதுகாப்புத் தரப்பினர், அரச தலைவர் செயலகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களுக்கு 22 தடவைகள் வாடகை எதுவும் பெறப்படாமல் இடம் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளமையும் வழங்கியுள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|