58 ஐ தாண்டியது உயிர்ப்பலி! 132 பேரை காணவில்லை!!

கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 132 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை அவர்கள் குறித்த எதுவித தகவல்களும் இல்லாத நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.
காணாமல் போனவர்களில் 128 பேர் மிகப்பெரும் மண்சரிவு அனர்த்தம் நிகழ்ந்த அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு மேலதிகமாக 28பேர் கடுமையான காயங்களினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக நேற்று மாலை வரை சுமார் நான்கு லட்சத்து இருபதினாயிரம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் மூன்று லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் பேர் 594 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றனர்.
மேலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 288 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 3057 வீடுகள் பகுதிவாரியாக சேதத்துக்குள்ளாகி இருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இயற்கைச்சீற்றம் காரணமாக அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள மாவட்டமாக கொழும்பு மாவட்டம் பதிவாகியுள்ளது. இங்கு ஒரு லட்சத்தி எழுபத்தி ஐயாயிரம் பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிலும் குறிப்பாக கொலன்னாவை பிரதேசத்தில் மட்டும் ஒரு லட்சம் பேரளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|