31வது ஒலிம்பிக் பிரேசிலில் நாளை கோலாகலமாக ஆரம்பம்!

Thursday, August 4th, 2016

உலகம் முழுவதும் தற்சமயம் எதிர்பார்த்து காத்திருக்கும் 31வது கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை 5ம்திகதி பிரேசிலின் தலைநகரில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.இப்போட்டி எதிர்வரும் 21ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 10500 வீர,வீரங்கனைகள் பங்கேற்கின்றனர்.இலங்கை சார்பாக 9 வீர.வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரேசில் பயணமானமை விசேட அம்சமாகும்.

200 இற்கும் அதிகமான நாடுகள் பங்கு பெறும் ஒலிம்பிக் போட்டிகள் உலக விளையாட்டரங்கில் அதிகம் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு போட்டியாகவும் கௌரவமான விளையாட்டு போட்டியாகவும் கருதப்படுகின்றது. அத்துடன் அரசியல் ரீதியான பகைகள் ஒற்றுமைகள் மறந்து அனைத்து நாடுகளும் சமத்துவமாகவும் விளையாட்டுணர்வுடனும் மோதிக்கொள்ளும் களமாகவும் ஒலிம்பிக் போட்டிகள் விளங்குகின்றன.

ஒலிம்பிக் போட்டிகள் பல ஆயிரம் வருடங்கள் பழமையானதும் பல ஆயிரம் வருட வரலாற்றைக் கொண்டதாகவும் விளங்குகின்றது. கிறிஸ்துவுக்கு முன்னரான காலப்பகுதியிலேயே கிரீஸில் ஒலிம்பியா நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வந்துள்ளன.

ஒலிம்பிக் போட்டிகள் ஆதி காலம் தொட்டு வழக்கத்தில் இருந்தாலும் முதன் முறையாக 17 ஆம் நூற்றாண்டிலேயே முறையான ஆவணப்படுத்தலுடன் போட்டிகள் நடைபெற்றன. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல மாற்றங்களை சந்தித்த ஒலிம்பிக் போட்டிகள் முதன் முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கீழ் 1896 ஆம் ஆண்டு அதன் தாயகமான கிரீஸில் ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது.

இப்போட்டிகளே இன்றுவரை சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளின் முறையான ஆரம்பமாக கருதப்படுகிறது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 வருடங்களுக்கொருமுறை நடாத்தப்பட்டு வருகின்றது. 1916, 1940, 1944 ஆண்டுகளில் உலகப்போர் காரணமாக போட்டிகள் தடைப்பட்டிருந்தாலும் மற்றைய ஆண்டுகளில் தொடர்ச்சியாக சரியான முறையில் நடைபெற்று வருகின்றது.

இம்முறை 2016 ஆம் ஆண்டிற்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ நகரில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் மூலம் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் முதலாவது தென்னமெரிக்கா நகராக பெருமை பெற்றுள்ளது ரியோ. அத்துடன் உலக தென் அரைக்கோளத்தில் நடைபெறும் 3 ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டியாகவும் இவ்வருட ஒலிம்பிக் போட்டிகள் அமைந்துள்ளன.

இம்முறை பங்கெடுக்கும் நாடுகளின் எண்ணிக்கை, விளையாட்டுக்களின் எண்ணிக்கை என்பன சாதனையாக அமைந்துள்ளன. இம்முறை 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களின் சார்பாக 10,500 இற்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கெடுக்கின்றனர். அத்துடன் 28 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 306 பிரிவுகளில் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இப்போட்டிகள் அனைத்தும் பிரேசில் நாட்டின் ரியோ நகரின் 33 இடங்களிலும் சேவ் போலோ நகரின் 5 இடங்களிலும் நடைபெறவுள்ளன. இவ்வருட போட்டிகளுக்கான தொடக்க விழா நாளை 5 ஆம் திகதி மரகனா அரங்கில் நடைபெறவுள்ளது. இதே அரங்கில் 21 ஆம் திகதி நிறைவு விழாவும் இடம்பெறவுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு விளையாட்டுக்களில் பல்வேறு நாட்டு வீரர்கள் பதக்கங்கள் பெற்றிருந்தாலும் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகளவான பதக்கங்களைப்பெற்று ஒலிம்பிக் அரங்கில் ஜாம்பவான்களாக திகழ்கின்றது.

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஐக்கிய அமெரிக்கா 977 தங்கப்பதக்கங்கள் 758 வெள்ளிப்பதக்கங்கள் 668 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 2403 பதக்கங்களை பெற்று அசைக்கமுடியாத பதக்க வேட்டை நடாத்தியுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் சோவியத் ரஷ்யா 395 தங்கம் 319 வெள்ளி 296 வெண்கலம் என மொத்தமாக 1010 பதக்கங்களுடன் காணப்படுகின்றது. பிரித்தானியா(780), பிரான்ஸ்(669), சீனா(473) என்பன அடுத்த இடங்களில் உள்ளன. (இலங்கை 1 வெள்ளி 1 வெண்கலம் உடன் 111 ஆவது இடத்தில் உள்ளது.)

தனி நபர் சாதனைகளை பொறுத்தவரை அமெரிக்கா நீச்சல் வீரர் மைகேல் பெல்ப்ஸ் 18 தங்கம் 2 வெள்ளி 2 வெண்கலம் என 22 பதக்கங்களை பெற்று முதலிடம் வகிக்கிறார். ரஷ்யா ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லரிஸ லதீனினா 9 தங்கம் 5 வெள்ளி 4 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார். தற்கால விளையாட்டில் தடகளத்தில் அதிகம் பேசப்படும் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் 6 தங்க பதக்கங்களை பெற்றுள்ளார்.

இம்முறை அதிகப்படியாக அமெரிக்கா சார்பில் பெல்ப்ஸ் உட்பட 550 வீரர்கள் போட்டிகளில் பங்குபெறுகின்றனர். போட்டியை நடத்தும் நாடு பிரேசில் சார்பாக 464 வீரர்கள் பங்குபெறுகின்றனர். இலங்கை சார்பில் 9 வீரர்கள் பங்குகொள்கின்றனர்.

தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகள் இம்முறை நவீன முறையில் அதிக வீரர்களுடன் அதிக மக்களின் எதிர்பார்ப்புக்களுடன் பலரின் கனவுகளை நனவாக்க காத்திருக்கின்றது.

Related posts: