30 வருடங்களுக்கும் மேலாகப் புனரமைக்கப்படாது கிடக்கும் சுன்னாகம் மேற்கு கணக்கர் வளவு வீதி!

வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட சுன்னாகம் மேற்குக் கணக்கர் வளவு வீதி கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகப் புனரமைக்கப்படாது மிக மோசமாகச் சேதமடைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களும், குறித்த வீதியால் போக்குவரத்துச் செய்வோரும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் வீதியின் பெரும்பாலான இடங்களில் குன்றும் குழிகளும் காணப்படுவதுடன்,மழை காலத்தில் குறித்த வீதியை அறவே பயன்படுத்த முடியாதுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வீதி புனரமைக்கப்படாமை தொடர்பில் வலி.தெற்குப் பிரதேச சபையின் கவனத்திற்கு எழுத்து மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும் பல தடவைகள் கொண்டு சென்ற போதும் இதுவரை குறித்த வீதியைப் புனரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி வீதிக்கு அண்மையிலுள்ள பல வீதிகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் தமது பகுதியிலுள்ள வீதியைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படாமை தம் மீது பாரபட்சம் காட்டப்படுகிறதா? என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாகவும் அப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்குடன் குறித்த வீதியைப் புனரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப் பகுதிப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related posts:
|
|