வீதி ஒழுங்கு விதிமீறல் தண்டம் தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்!

மீறல்களுக்கான குறைந்தபட்ச தண்டத்தை 2,500ரூபாவாக உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முடிவு தொடர்பாக, உரிய தீர்வை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வழங்காவிடில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து சங்கம் எச்சரித்துள்ளது.
குறைந்தபட்சம் தண்டம் அதிகரிப்புத் தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அச்சங்கத்தின் தலைவர் சரத் விஜிதகுமார, வரவு – செலவு திட்டத்தில் நிதியமைச்சரால் பிரேரிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சத் தண்டப்பண அதிகரிப்பை, சங்கத்துடன் மேற்கொள்ளும் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
“குறைந்தபட்ச தண்டத்தை, 20ரூபாவிலிருந்து 2,500ரூபாவாக உயர்த்துவது நியாயமற்றது. ஒரு குற்றத்துக்கான தண்டம் இந்தளவுக்கு அதிகரிக்கப்படுமாயின் ஏனைய குற்றங்களுக்கு எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பதை நாம் உணரலாம்” என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்த கருத்து தெரிவித்த அவர் “பேருந்து சாரதிகள் மாத்திரம் தான் வீதிகளில் உயிரிழப்பை ஏற்படுத்துபவர்கள் அல்லர்.
அவர்கள் அவ்வாறு உயிர்களைப் பறித்தால், தந்போதைய வீதிகளின் நிலைமையாலேயே ஆகும். வேலை நிறுத்தத்தின் பின்னர், எமக்கு கலந்துரையாடல் தேவையற்றது. கெமுனு விஜேரத்னவின் பேருந்து சங்கம் போன்று எங்களுடைய சங்கம் முடிவுகளை எடுப்பதில்லை. கலந்துரையாடல்களின் பின்னரே, நாம் முடிவுகளை எடுப்போம்” என்றார்.
Related posts:
|
|