விவசாயிகளிடம் இருந்து பூசணிக்காயை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை!

Friday, May 11th, 2018

நாட்டின் பல பிரதேசங்களில் பூசணிக்காய் உற்பத்தியை மேற்கொள்ளும் உற்பத்தியாளர்கள் தமது அறுவடையை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என விவசாய அமைச்சுக்கு செய்திகள் கிடைத்துள்ளன.

இம்முறை பூசணிக்காய் அறுவடை அதிகரித்துள்ளது. அதற்கமைவாகச் சந்தையிலும் அதற்குரிய விலை கிடைக்காமையே தற்போதைய நிலைமைக்கு காரணமாகும்.

இதனைக் கருத்திற்கொண்டு பூசணிக்காயை உற்பத்தி செய்த விவசாயிகளைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர திறைசேரியிடம் கோரியிருந்தார்.

வுpவசாய அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக சில பிரதேசங்களில் மேலதிகமாகவுள்ள பூசணிக்காய் அறுவடையை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியால் 50 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி தற்பொழுது இந்த மாவட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு பூசணிக்காய் அறுவடையை கொள்வனவு செய்து பொருத்தமான வகையில் சந்தைக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் அறுவடையை விற்பனை செய்ய முடியாதுள்ளமையால் மனம் தளர்வு ஏற்பட இடமிருப்பதால் அவர்களைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும். இதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts: