விவசாயப் போதனாசிரியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி – மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்!

Sunday, October 1st, 2017

வடக்கு மாகாணத்தின் விவசாயப் போதனாசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள் இந்தியாவில் இடம்பெறும் என வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் மிகப் பெரிய பொருளாதாரம் விவசாயமாகும். அதனை இலகுவாக மேற்கொள்வதற்கு பல்வேறு வகையான நவீன உபகரணங்கள் உள்ளன. ஆனால் அவற்றை நாம் சரியான முறையில் பயன்படுத்துவதற்குரியமுழுமையான விளக்கங்கள் போதாதுள்ளன.

விவசாயப் போதனாசிரியர்கள் இதனை முறையாகக் கற்றுக் கொள்வதன் மூலம் இங்கே அனைவருக்கும் வழிகாட்டமுடியும். இதற்காக வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தில் கடமையாற்றும் போதனாசிரியர்கள், பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் உட்பட 15 பேர் மற்றும் 5 மாவட்டங்களில் இருந்தும் 2 விவசாயிகள் வீதம் 25 பேர் இந்தியாவுக்குச் செல்லவுள்ளனர்.

இரண்டுவார காலப் பயிற்சியாக இது அமையவுள்ளது. நவீன விவசாய முறைகள், நவீன இயந்திரங்களின் பாவனை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக அவர்கள் பயிற்சிகளைப் பெறவுள்ளனர்.இவர்களின் இடைநேர் செலவுக்கான 13 லட்சத்து 6 ஆயிரம் ரூபா நிதியை வடக்கு மாகாணசபையின் நிதியிலிருந்து பெற்றுக் கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தப் பயிற்சி நெறிக்குச் செல்லவுள்ளவர்களின் விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன. அங்கே சரியான முறையில் பயிற்சிகளைப் பெற்று எமது மாகாணத்தில் விவசாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே எமது நோக்கம் என்று மேலும் தெரிவித்தார்.

Related posts: