வில்லூன்றிப் பிள்ளையார் ஆலய வீதியிலுள்ள கழிவு வாய்க்காலால் பெரும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு முகம் கொடுக்கும் மக்கள்!

Wednesday, April 6th, 2016

யாழ்ப்பாணம் ஜே- 83 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்பட்ட வில்லூன்றிப் பிள்ளையார் கோவில் வீதியிலுள்ள கழிவு வாய்க்கால் உரிய பொறிமுறைகளுடன் அமைக்கப்படாத காரணத்தால் தாம் பெரும் சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்நோக்குவதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த கழிவு வாய்க்கால் யாழ். மாநகர சபைக்கு சொந்தமானதாகும். இந்த வாய்க்கால் கடந்த 2002 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் பின்தங்கிய கிராமங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமொன்றின் ஊடாக சுமார்-20 இலட்சம் ரூபா நிதிப் பங்களிப்பில் அப் பகுதி மக்களின் பூரண சரீர உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது. எனினும் குறித்த கழிவு  வாய்க்கால் உரிய பொறிமுறைகளுடன் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாகக்  கழிவு நீர் வழிந்தோடாது தேங்கி நிற்பதுடன், கடும் துர்நாற்றமும் வீசுவதால் அப் பகுதி மக்களும் வீதியால் பயணிப்பவர்களும் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர்.

வில்லூன்றிப் புனித தீர்த்தக் கேணிக்கு முன்பிருந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரை கழிவு வாய்க்கால் நிர்மாணம் இடம்பெறாத நிலையில் தனியார் காணியொன்றுக்குள் இதுவரை காலமும் மேற்படி  கழிவு வாய்க்காலால் கழிவு நீர்  வெளியேற்றப்பட்டு வந்தது . காணி உரிமையாளரால் இந்த விடயம் யாழ். மாநகர சபையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் கடந்த வாரம் எஞ்சியிருந்த பகுதியில் தற்காலிக வாய்க்கால் வெட்டப்பட்டு அப் பகுதியிலுள்ள கடலுக்குக்  கழிவு நீர் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை. புதிதாக வாய்க்கால் வெட்டப்பட்ட பகுதி மேடாகக் காணப்படுவதால் நீர் வழிந்தோட முடியாமல் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனாலும்  நுளம்பு பெருகக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதுடன் சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்க்கால் உரிய பொறிமுறைகளுடன் அமைக்கப்படாத காரணத்தால் மழை காலங்களில் தாம் ஒவ்வொரு வருடமும் வெள்ளப் பாதிப்புக்களுக்கு முகம் கொடுப்பதாகத் தெரிவிக்கும் பொதுமக்கள் யாழ். மாநகர சபை இந்த விடயத்தில் கவனம் செலுத்தித் தமக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

be886304-4326-4195-b1a9-ba84dbeae208

 

Related posts: