வவுனியாவில் கடையடைப்பு இல்லை – வர்த்தக சங்கம் !

Tuesday, April 25th, 2017

எதிர்வரும் 27 ஆம் திகதி கடையடைப்பு செய்யப்பட மாட்டாது என்றும் வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முடிவு எடுத்துள்ளதாகவும் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி எதிர்வரும் 27ஆம் திகதி பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கடிதம் வழங்கப்பட்டது.  இது தொடர்பில் வவுனியா வர்த்தக சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துரையாடியிருந்தனர். இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் 10 பேர் கலந்து கொண்டனர்.

இதன்போது எதிர்வரும் 27ஆம் திகதி பூரண கடையடைப்பு மேற்கொள்வது தொடர்பில் அவர்கள் கேட்டுள்ள போதும் அதனை மேற்கொள்ள போதிய கால அவகாசம் இல்லை என தீர்மானிக்கப்பட்டதுடன், இப்போராட்டத்திற்கு ஆதரவாக அன்றைய தினம் கடைகளில் கறுப்பு கொடியை பறக்க விட்டு வழமை போல் வர்த்தக நிலையங்களை திறந்து ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் முதலாம் திகதி தொழிலாளர்கள் உரிமைக்காக கடைகள் பூட்டப்பட்டு விடுமுறை வழங்கப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், வடக்கின் ஏனைய மாவட்டங்களில் பூரண கடையடைப்புக்கு வர்த்தக சங்கங்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரியவருகிறது.

Related posts: