வங்களா விரிகுடாவில் தாழமுக்கம்: இலங்கைக்கு சூறாவளி எச்சரிக்கை!

Friday, December 14th, 2018

வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் 2018 டிசம்பர் 13ஆம் திகதி காலை 05.30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு – தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 6.5N, கிழக்கு நெடுங்கோடு 88.7E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.

இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைய கூடும்.

தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது என வளிமண்டவிலயல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாகவும் வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: