யூலை-21 ஆம் திகதி முதல் யூலை-28 ஆம் திகதி வரை சகோதரத்துவ வாரம்!

யூலை-21 ஆம் திகதி முதல் யூலை-28 ஆம் திகதி வரை சகோதரத்துவ வாரத்தை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதன் ஆரம்பகட்டமாக நாட்டிலுள்ள இந்து, பெளத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் ஆகிய அனைத்து மத ஸ்தலங்களையும் மையமாக வைத்து துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். அதேபோன்று நாடளாவிய ரீதியில் மக்களை அறிவுறுத்தும் வகையில் இந்தத் தினத்தை மையமாக வைத்துப் போஸ்டர் இயக்கத்தை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார் சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர.
சோஷலிச இளைஞர் சங்கம் அனுஷ்டிக்கவுள்ள சகோதரத்துவ வாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களைத் தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பொன்று நேற்று (12) பிற்பகல் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நிகழ்வின் பிரதான அங்கமாக எதிர்வரும் -23 ஆம் திகதி சகோதரத்துவ இலக்கிய விழாவை யாழ்ப்பாணத்தின் றிம்மர் மண்டபத்தில் பிற்பகல்-2 மணி முதல் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். 23 ஆம் திகதிக்கு முன்னதாக நாங்கள் கவிதை, சித்திரம், ஆகிய துறைகள் சார்பான இலக்கியப் போட்டிகளைப் பாடசாலை மட்டத்திலும், திறந்த மட்டத்திலும் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். இந்தப் போட்டிகள் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடைபெறவுள்ளது. இவ்வாறான இலக்கியப் போட்டிகளை நடாத்துவதற்கும், சகோதரத்துவ தினத்தை அனுஷ்டிப்பதற்கும் கலைஞர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், ஆசிரியர்கள், மதத் தலைவர்களின் ஒத்துழைப்புக்கள் எங்களுக்கு ஏற்கனவே கிடைத்துள்ளன. போட்டிகளுக்கான ஆக்கங்களும் எங்களுக்குத் தினம் தோறும் கிடைத்த வண்ணமுள்ளன. 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலக்கிய விழாவின் போது போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கலும் இடம்பெறும்.
2008 ஆம் ஆண்டு முதல் நாங்கள் எட்டு வருடங்களாகத் தொடர்ச்சியாகச் சகோதரத்துவ தினத்தை அனுஷ்ட்டித்து வருகிறோம். இந்த நாட்டிலே தமிழ், சிங்கள, முஸ்லீம் என்ற இனபேதங்களின்றி எல்லா மக்களிடமும் ஒற்றுமையை வளர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தித் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் வாயிலாகவே இந்த நாட்டில் நிலவி வரும் இனப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியுமென நாம் நம்புகின்றோம். அதன் ஒரு கட்டமாகவே நாம் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்துகின்றோம். இந்த வருடம் நாங்கள் தேசிய ஒற்றுமையை வளர்க்கும் சகோதரத்துவ தினத்தை ஒரு வாரமாகப் பிரகடனப்படுத்தியிருக்கின்றோம் என்றார்.
Related posts:
|
|