யாழ்ப்பாணம் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இரு இளைஞர்களை ஈவினையில் மறித்துத் தாக்கிய முகமூடிக் கும்பல்

Wednesday, May 4th, 2016

யாழ்ப்பாணம் சென்று விட்டு  புன்னாலைக் கட்டுவன்-  புத்தூர் வீதியால் மோட்டார்ச் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இரு இளைஞர்களை வழிமறித்த முகமூடிக் கும்பலொன்று அவர்களைக் கடுமையாகத் தாக்கியதுடன் அவர்கள் பயணித்த மோட்டார்ச் சைக்கிளையும் பறித்துச் சென்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த அச்செழுவைச் சேர்ந்த சி.சாள்சன் (வயது-25) என்ற இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றுச் செவ்வாய்க்கிழமை (03-05-2016) இரவு -9 மணியளவில் குறித்த இளைஞனும் , அவரது நண்பரொருவரும் தேவையின் நிமிர்த்தம் யாழ்ப்பாணம் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இதன் போது ஈவினையில் முகத்தைக் கறுப்புத் துணியால் கட்டியவாறு கையில் வாள் , கத்திகளுடன் நின்ற குழுவொன்று குறித்த இருவரையும் வழிமறித்துக் கடுமையாகத் தாக்கியுள்ளது.

இரு இளைஞர்களும் நிலை குலைந்து கீழே விழுந்த பின்னர் இரு இளைஞர்களும் பயணித்த மோட்டார்ச் சைக்கிளையும் பறித்துக் கொண்டு குறித்த கோஷ்டி தப்பிச் சென்றுள்ளது. இதன் பின்னர் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: