யாழ்ப்பாணத்தில் 10 பேர் கைது!

Wednesday, June 19th, 2019

கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய இடங்களில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளையடுத்து 10 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் 10 பேரும் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், உத்தரவிட்டிருப்பதுடன், அவர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், கொக்குவில் தொடருந்து நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான இளைஞர் ஒருவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அவரையும் வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்ச வனப்பதியில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த பெறுமதியான இலத்திரனியல் பொருள்கள் உள்ளிட்ட தளபாடங்களை அடித்து உடைத்து பெற்றோல் ஊற்றிக் கொழுத்தினர்.

3 உந்துருளிகளில் பிரவேசித்த 9 பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலையடுத்து மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் குழு ஒன்று, அங்கிருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் வாள்களால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது.

அதனையடுத்து சுன்னாகம் ஐயனார் கோவிலடியில் உள்ள வீடொன்றில் பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: