யாழ்ப்பாணத்தில் ஆறு பிரதான சந்திகளில் வீதிச் சமிக்ஞைகள் பொருத்த நடவடிக்கை!

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆறு பிரதான சந்திகளில் வீதிச் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்படவுள்ளன. இந்த சமிக்ஞை விளக்குகளை நான்குமாத காலப்பகுதிகளில் இணைப்புச் செய்வதற்கான ஏற்பாடுகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொண்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் பிரதான வீதிகளில் போக்குவரத்து நெருக்கடியும் வாகன விபத்துக்களும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த நிலையை கருத்தில்கொண்டு வீதிச்சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துமாறு கோரிக்கை விடப்பட்டு வந்த தோடு பிரதேச செயலக ரீதியிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வலியுறுத்தப்படுகின்றது.
கோப்பாய் சந்தி, வேம்படிச் சந்தி, திருநெல்வேலிச் சந்தி, ஆரியகுளம் சந்தி, நெல்லியடிச்சந்தி, சுன்னாகம் சந்தி ஆகிய ஆறு சந்திகளில் வீதிச் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.
யாழ்.நகரில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக சத்திரத்து சந்தியில் வீதிச்சமிக்ஞை விளக்கு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இது பரீட்சார்த்தமாக யாழ். மாவட்டத்தில் முதன்முதலாக பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வீதி விளக்குகள் பொருத்துவதற்கு உரிய அனுமதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்கு முன்னர் குறித்த ஆறு சந்திகளிலும் வீதி விளக்கு சமிக்ஞை இணைப்புச் செய்து முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மே தின ரயில் சேவை: 6இலட்சத்து 25ஆயிரத்து 875 ரூபா வருமானம்!
பாடசாலை மாணவர்களுக்கு பாலுக்கு மாற்றீடாக அரிசிக் கஞ்சி - விவசாய அமைச்சு தகவல்!
வெறிச்சோடிய கொடிகாமம் - கடமையில் பாதுகாப்பு தரப்பினர்!
|
|