யாழ்பாணத்தில் தனியார் பேருந்துகளுக்கு சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்க அன்றுமுதல் நடவடிக்கை!

Wednesday, June 22nd, 2022

யாழ்பாணத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு இன்றுமுதல் சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (21) யாழ்பாண அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த செயற்றிட்டம் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது.

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் வழங்கப்படாதமையை கண்டித்தும் யாழ்.சாலையில் இடம்பெற்ற அனர்த்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் இன்றையதினம் (22) தமது பேருந்துகள் சேவையில் ஈடுபட மாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

உடனடியாக இந்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இரு தரப்பினருடனும் கலந்துரையாடல் மேற்கொண்டு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் தாம் வழமைபோல் சேவையில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்..

யாழ். செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய முகாமையாளர் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: