மூன்று வீடுகளில் நேற்றும் கொள்ளை: இருவர் மீது தாக்குதல் – தென்மராட்சியில் தொடரும் பயங்கரம்!

Thursday, July 26th, 2018

மூன்று வீடுகளுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களைத் தாக்கிக் காயப்படுத்தி நகைகளைக் கொள்ளையிட்டனர். இந்தச் சம்பவங்கள் சாவகச்சேரியில் நேற்று முன்தினம் இரவு நடந்துள்ளது.

சாவகச்சேரி, சங்கத்தானையில் இரவு முகமூடி அணிந்த மூவர் சுவர் எறிக் குதித்து நுழைந்துள்ளனர். வீட்டின் வெளியே படுத்திருந்தவர் இவர்களைக் கண்டு கூச்சலிட்டுள்ளார். அவரது தலையில் வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர்.

சாவகச்சேரி வடக்கில் இரவு வீட்டின் கதவை உடைத்து முகமூடி அணிந்திருந்த மூவர் உள்நுழைந்துள்ளனர். அங்கிருந்த மூதாட்டி பெரும் சத்தமிட்டுள்ளார். கொள்ளையர்கள் அவரைத் தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்.

மீசாலை மேற்கு கேணியடி ஒழுங்கையில் உள்ள வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த குழந்தையில் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தியுள்ளனர். அங்கிருந்த முதியவர் ஒருவரை தாக்கியுள்ளனர். பெண்கள், குழந்தைகள் அணிந்திருந்த நகைகளை அபகரித்து தப்பியோடியுள்ளனர். சாவகச்சேரிப் பொலிஸார் இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி மீசாலையில் வாள்களுடன் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி 15 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளைக் கொள்ளையடித்தனர். 13 ஆம் திகதி தென்மராட்சியில் கொள்ளை முயற்சி கொடிகாமத்தில் இடம்பெற்றிருந்தது. அதன்போது குடும்பத் தலைவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுச் சென்றிருந்தனர். கடந்த 18 ஆம் திகதி எழுதுமட்டுவாளில் வாள்களுடன் புகுந்த கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: