முதல்வரை விலக்கினால் தொடர்புகள் துண்டிக்கப்படும் – சுரேஸ்

Friday, June 16th, 2017

எதிர்க்கட்சியினருடன் இணைந்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக்கட்சியினர் போர்க்கொடி தூக்கியிருப்பதானது மிகவும் அநாகரிகமான செயற்பாடு என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு முதல்வரை விலக்கினால் தமிழரசுக் கட்சியுடனான சகல தொடர்புகளையும் தமது கட்சி துண்டிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

”வடக்கு மாகாண முதலமைச்சர் என்பவர் ஒட்டு மொத்த வடக்கு மக்களின் பிரதிநிதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி. அவரை கடந்த 2013இல் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் இணைந்தே அதற்கான முன்மொழிவை வைத்தன.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு இன்று முதலமைச்சராக உள்ள ஒருவரை, ஏனைய பங்காளிக் கட்சிகளை புறந்தள்ளிவிட்டு தமிழரசுக்கட்சி மாத்திரம் முடிவெடுத்து மாற்ற முடியாது. மாற்றுவதற்கும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், முதல்வர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடியதாக வடக்கு மாகாண சபையிலும் அதற்கு வெளியிலும் செயற்படுபவர்.

அவ்வாறானவர், ஊழல் மோசடிகளைச் செய்தவர்களை அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக்க முற்படும் போது, தமக்கு சார்பானவர்களைக் காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சியின் துணை கொண்டு தமிழரசுக்கட்சி முதலமைச்சரையே விலக்க முற்படுவதானது, ஊழல் மோசடிக்காரர்களைப் பாதுகாப்பதாக அமைகிறது.

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலிலேயே இச்செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. வடக்கு மாகாண சபையின் 2 சிங்கள உறுப்பினர்கள், 3 முஸ்லிம் உறுப்பினர்களின் துணைகொண்டு முதலமைச்சருக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதாக இருந்தால், அது தமிழரசுக்கட்சி மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியனவும் இணைந்தே அதனைக் கொண்டு வருவதாக அர்த்தம்.மூச்சுக்கு 300 தடவை தந்தை செல்வாவின் பெயரைச் சொல்லும் தமிழரசுக்கட்சியா தமிழர் விரோத செயற்பாட்டைச் செய்கின்றது?

தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை ஈ.பி.ஆர்.எல்.எப். கடுமையாக எதிர்க்கின்றது. முதலமைச்சரை வெளியேற்றும் தீர்மானத்தை அக்கட்சி கொண்டு வந்தால், கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியுடனான தொடர்புகளை ஈ.பி.ஆர்.எல்.எப். துண்டிக்கும். மக்களும் தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை நிராகரிப்பார்கள். நீதி கேட்டு வீதிக்கு இறங்குவார்கள்’ என்றார்.

Related posts: