முதலாவது நேர்முகத் தேர்வுடன் அரச வேலை வழங்க வேண்டும் – வடமாகாண பட்டதாரிகள் வலியுறுத்து!

Friday, June 22nd, 2018

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நடைபெறவுள்ள இரண்டாவது நேர்முகத் தேர்வினை நிறுத்தி முதலாவது நேர்முகத் தேர்வுடன் நிறுத்தி முதலாவது நேர்முகத்தேர்வுடன் அரசாங்க வேலை வழங்கப்பட வேண்டும் எனவும் ஏற்கனவே உறுதியளித்தபடி அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்து வடக்கு மாகாண பட்டதாரிகள் நேற்று யாழ் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்புப் போரட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படாவிட்டால் தமது போராட்டம் தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படும் எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.

இப் போராட்டம் தொடர்பில் பட்டதாரிகள் மேலும் தெரிவிக்கையில் கவனயீர்ப்புப் போராட்டமும் கலந்துரையாடலும் மேற்கொண்டமைக்கு முக்கியமான காரணம் ஜீலை ஐந்தாம் திகதி முதற் கட்டமாக 5 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதாக வாக்குறுதியளித்து அடுத்த கட்டமாக 15 ஆயிரம் பேருக்கு நேர்முகத்தேர்வு நடத்துவதாக தீர்மானித்திருந்தது.

ஏற்கனவே 57 ஆயிரம் பட்டதாரிகள் இந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டிருந்தோம். இதற்கு ஒரு சரியான முடிவு கூறாமல் அரசு நினைத்ததை செய்து வருகின்றது.

எமது பாராளுமன்ற மாகாண சபை உறுப்பினர்கள் இது தொடர்பில் அக்கறையுடன் செயற்படுவதாக எமக்குத் தெரியவில்லை. பல பாராளுமன்ற உறுப்பினர்களை பல்வேறு தடவைகள் சந்தித்த போதிலும் எமக்கான தீர்வை அவர்கள் பெற்றுத் தரவில்லை. ஆகவேதான் இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் என பட்டதாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts: