மீள்குடியேற 6,266 முஸ்லிம்கள் காத்திருப்பு!
Tuesday, May 31st, 2016யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவின் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், பிரதேச ஒருங்கிணப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் தலைமையில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) ஒன்றுகூட்டப்பட்டது.
இதன்போது, பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் விஷேட வேண்டுகோளுக்கு அமைவாக, ‘யாழ்ப்பாணம் பிரதேச முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்’ என்னும் விடயம் தனியாக கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, யாழ்ப்பாணம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட முஸ்லிம் மக்களின் தரவுகள் வெளியிடப்பட்டன. அதன் பிரகாரம், யாழ்ப்பாணம் பிரதேச செயலக எல்லைக்குள் மீள்குடியேற்றத்துக்காக பதிவு செய்துள்ள குடும்பங்கள், யாழ்ப்பாணம் பிரதேச எல்லைக்குள் வாழ்கின்ற குடும்பங்களில் 10 சதவீதமான மக்கள், முஸ்லிம்கள் என்ற தகவல் வெளியிடப்பட்டது.
- மொத்தமாகப் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் – 2,108: நபர்கள் – 8,750.
• தற்போது யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்கள் – 503: நபர்கள் – 2,134
• மீளக்குடியேறுவதற்குள்ள முஸ்லிம் குடும்பங்கள் – 1,528: நபர்கள் – 6,266
• யாழ்ப்பாணம் பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ள குடும்பங்கள் – 77, நபர்கள் – 350
தற்போது வசிக்கின்ற 503 குடும்பங்களுள் 189 குடும்பங்களுக்கு சொந்தக் காணிகள் இருக்கின்றன. 22பேர், பொது நிறுவனங்களின் காணிகளில் வசிக்கின்றனர். 289பேர், காணித் தேவைக்காக விண்ணப்பித்திருக்கின்றார்கள். மீளக்குடியேறவிருக்கின்றவர்கள், தமது காணித் தேவைகளுக்காக விண்ணப்பங்களை இதுவரை வழங்கவில்லை.
வீடமைப்பு, கிணறு, மலசலகூடம், வாழ்வாதாரம் போன்ற பல்வேறு தேவைகளுக்காக முஸ்லிம் மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக வீடமைப்பு விடயத்தில் இதுவரை இந்திய வீட்டுத்திட்டம் 48 குடும்பங்களுக்கும் யூ.என்.டி.பி வீட்டுத்திட்டம் 15 குடும்பங்களுக்கும், எம்.எப்.சீ.டி.நிறுவனத்தின் வீட்டுத்திட்டம் 9 குடும்பங்களுக்கும், வழங்கப்பட்டிருக்கின்றன. மீள்குடியேற்ற அமைச்சின் 8 இலட்சம் வீட்டுத்திட்டமானது 78 குடும்பங்களுக்கும் வழங்கப்படவிருக்கின்றன.
மேற்படி தரவுகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் கருத்துரைக்கையில், ‘இதவோரு முன்னேற்றகரமான செயற்பாடு. ஆனால், இதுகுறித்து முழுமையாகத் திருப்திப்பட முடியாது. யாழ்ப்பாணம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கிய மிகவும் அடிப்படையான பிரச்சினை, அரச அதிகாரிகளின் பாரபட்சமான செயற்பாடுகள் என்று இதுவரை சொல்லப்பட்டு வந்தது. அதில் உண்மைகள் இருக்கின்றன. ஆனால், இப்போது புதிய பிரதேச செயலாளர் பதவியேற்றுள்ளார், பல சாதகமான மாற்றங்கள் பிரதேச செயலகமட்டத்தில் ஏற்பட்டிருக்கின்றன’ என்றார்.
‘இப்போது மீள்குடியேற்றத்துக்காக பதிவுகளைச் செய்துள்ள குடும்பங்கள், வீட்டுத்திட்டங்களுக்காக விண்ணப்பிக்க முன்வரவேண்டும். காணிகள் தேவைப்படுவோர் அவற்றுக்காக விண்ணப்பிக்க முன்வரவேண்டும். இதுவிடயத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும்’ என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
Related posts:
|
|