மிருக பலி;  யாழ் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Saturday, April 2nd, 2016

குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகளை வெட்டி வேள்வி நடத்துவதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை நேற்று (1) பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

ஆலயங்களில் விலங்குகளை பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாக தடுத்து நிறுத்த, இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போதே, நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இறைச்சிக்கடை சட்டத்தின் கீழேயே இந்த வேள்விகளுக்கான ஆடு கோழி என்பவற்றை வெட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுவதனால். ஆலயங்களுக்கு அத்தகைய அனுமதி வழங்குவது சரியானதா என்றும், மிருக பலி கொடுத்து வேள்வி நடத்தும் ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் கோவில் நடத்துகின்றார்களா? அல்லது இறைச்சிக்கடை நடத்துகின்றார்களா? என்றும் நீதிபதி தனது உத்தரவில் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

யாழ் குடாநாட்டின் ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலி கொடுத்து நடத்தப்படும் வேள்வியை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவமகா சபையின் தலைவர் சிவக்கொழுந்து சோதிமுத்து, சட்டத்தரணி மணிவண்ணன் ஊடாக யாழ் மேல் நீதிமன்றத்தில் தடையீட்டு எழுத்தாணை மனு தாக்கல் செய்திருந்தார்.

வலிகாமம் வடக்கு வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு மற்றும் கோப்பாய் பிரதேசசபைகளின் செயலாளர்கள், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், தெல்லிப்பழை, சங்கானை, உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய் ஆகிய பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகரிகள் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோரை இந்த மனுவில் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மிருக பலி கொடுக்கும் வேள்வி நடத்துவதற்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்தால், அதற்கான அனுமதி வழங்கக் கூடாது என அனைத்து பிரதேச சபைகளுக்கும், சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும், வடமாகாண சுகாதார சேவைகள் அமைச்சு செயலாளருக்கும் மன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

இந்த உத்தரவுக்கு முரணாக எந்த இந்து ஆலயமாவது, மிருக பலி கொடுத்து வேள்வி நடத்தினால் அவ்வாறான ஆலயங்களின் அனைத்து தர்மகர்த்தா சபை உறுப்பினர்களுக்கும் எதிராக, நீதிமன்ற அவமதிப்பு குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.

Related posts: