மிரட்டல் காரணமாக உண்மையை கூறவில்லை – வித்தியா வழக்கில் சாட்சியம்!

Thursday, September 14th, 2017

மாணவியின் கொலை தொடர்பில் வெளியில் கூறினால் மாணவியை கொலை செய்ததைப் போன்றே தன்னையும் தனது குடும்பத்தாரையும் கொலை செய்வோம் என கொலையாளிகள் மிரட்டியதால், உண்மையை வெளியில் கூறவில்லையென, சம்பவத்தை நேரில் கண்ட மற்றுமொரு சாட்சியான மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

துஷாந்த் என்பவரின் காதலுக்கு உதவும் நோக்கத்திலேயே தான் அவர்களுடன் சென்றதாகவம், இவ்வாறு கொலை செய்வார்கள் என தான் நினைக்கவில்லையென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், நேற்றைய தினம் வழக்கு தொடுனர் தரப்பு தொகுப்புரை இடம்பெற்றது. இதன்போதே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. நேற்றைய தொகுப்புரையின் முழுமையான வடிவம் வருமாறு சட்டத்தரணிகள் முன்னிலை வழக்குத் தொடுனர் தரப்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், மற்றும் சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.எதிரிகள் தரப்பில் 1ம், 2ம், 3ம், 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன மற்றும் சட்டத்தரணி லியனகே ஆகியோரும், 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும், 4ம், 7ம் மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோரும் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலையானார். எதிரிகள் ஆஜர்படுத்தப்பட்டனர் எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரஹாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன் மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.வழக்கேட்டில் திருத்தம் முதலில் வழக்கேட்டில் சில திருத்தங்கள் செய்வதற்கு வழக்கு தொடுனர் தரப்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் விண்ணப்பம் செய்தார். அதனை அடுத்து திருத்தங்கள் செய்வதற்கு மன்று அனுமதித்தது. அதன் பிரகாரம் பிரதி சொலிஸிடர் ஜெனரல் குமார் இரட்ணம் சில திருத்தங்களை தெரிவித்தார்.அதனை தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரனும் சில திருத்தங்கள் செய்வதற்கு மன்றில் விண்ணப்பம் செய்தார். அதற்கு மன்று அனுமதித்ததை அடுத்து அவரும் சில திருத்தங்களை செய்தார்.அதனை தொடர்ந்து வழக்கு தொடுனர் தரப்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தொகுப்புரையை ஆரம்பித்தார்.எதிரிகளுக்கு எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வித்தியா எனும் மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் தற்போது குற்றவாளி கூண்டில் நிற்கும் ஒன்பது பேரையும் சட்டமா அதிபர் எதிரிகளாக கண்டு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, குற்றப் பகிர்வு பத்திரம் மன்றின் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விசேட மன்றிலே எதிரிகளுக்கு குற்றப்பகிர்வு பத்திரம் தனித்தனியாக வாசித்து காட்டப்பட்டது

அதன்போது, கடத்த திட்டம் தீட்டியமை, கடத்தியமை, வன்புணர்வுக்கு உட்படுத்தியமை, படுகொலை செய்தமை, உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன. அத்தனை குற்றச்சாட்டுக்களையும் எதிரிகள் தனித்தனியே மறுத்து தாம் நிரபராதிகள் என மன்றில் தெரிவித்தனர்.மகளை காணவில்லை!இந்த மன்றில் நடைபெற்ற சாட்சி பதிவுகளின் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் மன்றில் சாட்சியம் அளிக்கையில், தனது மகள் 13ஆம் திகதி காலை 7.15 மணியளவில் வீட்டில் இருந்து பாடசாலை நோக்கி புறப்பட்டதாகவும், பின்னர் மாலை வரை வீடு திரும்பாததால், மாலை மாணவியை தேடி அலைந்த பின்னர் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது, அங்கு முறைப்பாட்டை ஏற்க மறுத்தும், ஊர்காவற்துறை பொலிஸ் நிலைத்திற்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு கூறியதை அடுத்து தாம் இரவு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சாட்சியம் அளித்ததாகவும் கூறினார்.மறுநாள் 14ஆம் திகதி காலை வேளையில் மகளை தேடிச் சென்ற போது பாழடைந்த வீடொன்றின் பின் பகுதியில் உள்ள பற்றைக்குள் மகளின் சடலத்தை முதலில் மகன் கண்டதாகவும், மகன் சடலத்தை கண்டு கதறி அழுத சத்தத்தை கேட்டு தான் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது மகள் சடலமாக கிடந்தார் எனவும் சாட்சியம் அளித்திருந்தார்.11ஆவது சந்தேக நபருக்கு பொது மன்னிப்பு அதேபோன்று இந்த குற்றச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் 11ஆவது சந்தேக நபராக கைதுசெய்யப்பட்ட உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவருக்கு சட்டமா அதிபர் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்குவதாக உறுதி அளித்ததை அடுத்து அவர் அரச தரப்பு சாட்சியமாக மாறி சாட்சியம் அளித்தார்.காதலுக்கு உதவி செய்யவே சென்றனர்.6ஆவது எதிரியாக உள்ள பெரியாம்பி என அழைக்கப்படும் சிவதேவன் துஷாந்த், படுகொலை செய்யப்பட்ட மாணவியை ஒருதலையாக காதலித்ததாகவும், அக்காலப் பகுதியில் துஷாந்தின் மோட்டார் சைக்கிளில் தான் பின்னால் இருந்து செல்வதாகவும் உதயசூரியன் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாணவி வித்தியா பாடசாலை செல்லும் நேரம், வீடு திரும்பும் நேரங்களில் மாணவியின் பின்னால் செல்வதாகவும், ஒரு நாள் மாணவி தனது சப்பாத்தினை கழற்றி துஷாந்தை நோக்கி வீசியதாகவும், அதன் பின்னர் மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் என்பவரின் வீட்டில் கள்ளு குடிக்கச் சென்ற வேளை தானும் (சுரேஷ்கரன்) பெரியாம்பி எனும் துஷாந்த், 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன், 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் ஆகியோரிடம் வித்தியா துசாந்துக்கு சப்பத்தால் எறிந்த சம்பவத்தை கூறியதாகவும், அப்போது ஜெயக்குமார் மற்றும் தவக்குமார் ஆகியோர் 25 ஆயிரம் ரூபாய் பணம் தந்தால் வித்தியாவை கடத்தித் தருவதாக கூறினார்கள் என்றும் குறிப்பிட்டார். அதன் பிரகாரம் அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.மாணவியை கடத்த 3 நாட்களாக முயற்சி வித்தியாவை கடத்துவதற்காக 11ஆம் திகதி காத்திருந்த வேளை அன்றைய தினம் வித்தியா வேறு ஒரு மாணவியுடன் வந்ததால் அன்றைய தினம் திட்டத்தை கைவிட்டோம். மறுநாள் 12ஆம் திகதி காத்திருந்த போது வித்தியா பாடசாலைக்கு வரவில்லை. மறுநாள் 13ஆம் திகதி தானும் (சுரேஷ்கரன்) பெரியாம்பி எனும் துஷாந்த், 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் மற்றும் மாப்பிள்ளை எனும் நடராஜா புவனேஸ்வரன் ஆகியோர் மாணவிக்காக சின்ன ஆலடி எனும் பகுதியில் காத்திருந்தோம்.அவ்வேளை மாணவி அந்த வீதி வழியாக தனியாக வந்து கொண்டிருந்த வேளை துஷாந்த், மாணவியின் துவிச்சக்கர வண்டியினை மறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினான். அதற்கு மாணவி சம்மதிக்காததால், மாணவியின் கன்னத்தில் கைகளால் அடித்தான். அதன்போது மாணவி போட்டு இருந்த மூக்கு கண்ணாடி நிலத்தில் விழுந்தது. அதன் பின்னர், துஷாந்த், 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் ஆகியோர் மாணவியை பலவந்தமாக அருகில் இருந்த பாழடைந்த வீட்டுக்குள் இழுத்துச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள்.அதன் பின்னர் மாணவியை அங்கிருந்து தூக்கிச் சென்று அருகில் இருந்த பற்றைக்குள் உள்ள மரம் ஒன்றின் கீழ் வைத்து கட்டினார்கள். அதனோடு நான் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டேன்.காதலுக்கு உதவும் நோக்கிலேயே அங்கு சென்றேன். இவர்கள் இவ்வாறு செய்வார்கள் என தெரிந்திருந்தால் நான் அன்றைய தினம் அவர்களுடன் சென்றிருக்க மாட்டேன்” என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதேபோன்று இந்த சம்பவத்தை நேரில் கண்ட மற்றுமொரு சாட்சியான மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் என்பவர், தான் இவர்களுடன் சென்றது துஷாந்தின் காதலுக்கு உதவும் நோக்குடன் என்றும் ஆனால் இவர்கள் இவ்வாறு செய்வார்கள் என நான் நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதை மாறி மாறி பெரிய தொடுதிரை கைத்தொலைபேசியில் (டச் போன்) புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர். அதனை தனது மச்சானுக்கு அனுப்ப வேண்டும் என துஷாந்த், சந்திரகாசனுக்கு கூறியதை தான் கேட்டதாக மாப்பிள்ளை சாட்சியமளித்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் வெளியில் யாருக்காவது கூறினால் தன்னை படுகொலை செய்வோம் என கூறியதனால், தான் யாருக்கும் கூறவில்லையென சாட்சியம் அளித்தார்.சம்பவ தினத்தன்று கடமைக்கு தாமதமாக வந்தார்.அதேபோன்று வேலணை பிரதேச சபை பொறுப்பதிகாரி சாட்சியம் அளிக்கையில், சம்பவ தினமான 13ஆம் திகதி தமது பிரதேச சபையில் சாரதியாக கடமையாற்றும் 6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்த் காலை 9.15 மணியளவில்தான் வேலைக்கு வந்தார் என சாட்சியம் அளித்துள்ளார்.மாணவியின் தாயின் சாட்சியம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியத்தின் பிரகாரம், மாணவி பாடசாலை செல்லும் நேரத்தில் அதாவது காலை 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அவ்வாறெனில் இந்த வழக்கின் 6ஆவது எதிரி இந்த குற்றத்தினை செய்து விட்டு காலை 9.15 மணிக்கு கடமைக்கு சென்றிருக்கலாம். அதேபோன்று 5ஆம் எதிரி சம்பவ தினத்தன்று காலை 8 மணியளவில் சம்பவ இடத்திற்கு அருகில் சாரத்தினை மடித்து கட்டியவாறு வேகமாக நடந்து சென்றதை பெண் ஒருவர் கண்ணுற்றுள்ளார். அவரும் இந்த மன்றில் சாட்சியம் அளித்தார்.2ஆம் எதிரிக்கு எதிரான கண்கண்ட சாட்சியம் அதேபோல இரண்டாம் எதிரியான ஜெயக்குமாரை பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை செல்லும் நேரம் காலை 7.45 மணியளவில் சம்பவ இடத்திற்கு அருகில் கண்டுள்ளான். அவனும் இந்த மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தான்.அதேவேளை 2ஆம் எதிரியின் மனைவியின் அண்ணன் 2ஆம் மற்றும் 3ஆம் எதிரிகளை சம்பவ இடத்திற்கு அருகில் சம்பவ தினத்தன்று கண்டுள்ளார். அதேபோல் சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி ஆலடி சந்தியில் சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் உள்ளிட்டவர்கள் வாகனம் ஒன்றில் இருத்ததை கண்ணுற்றுள்ளார். அவரும் இந்த மன்றில் தோன்றி சாட்சியம் அளித்துள்ளார்.சாட்சியங்கள் முரண்படவில்லை.இந்த வழக்கில் வழக்கு தொடுனர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் எவையும் முரண்பாடாக இருக்கவில்லை.முதலாம் எதிரிக்கு எதிராக சாட்சியம் இல்லை.முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிராக வழக்கு தொடுனர் தரப்பினால் சாட்சியங்கள் ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை சம்பவ தினத்தன்று (13ஆம் திகதி) தன்னை தனது தம்பியான மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் பேரூந்து நிலையம் எற்றி சென்றது தொடர்பில் தனது சாட்சியத்தில் குறிப்பிடவில்லை.இரண்டாம் எதிரியின் மச்சான் மிரட்டப்படவில்லை.இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார், குற்றப்புலனாய்வு பிரிவினர் தனது மச்சானுடையதும் மனைவியினதும் வாய்க்குள் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டியதன் காரணமாகவே அவர்கள் தனக்கு எதிராக சாட்சியம் அளித்ததாக கூறினார். அவ்வாறு தாம் மிரட்டப்பட்டதனை மச்சானும் மனைவியும் வவுனியா சிறைச்சாலையில் தன்னை சந்தித்து கூறியதாகவும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.மூன்றாம் எதிரிக்கு வித்தியாவை தெரியாது!மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் தனக்கு வித்தியாவை தெரியாது என சாட்சியம் அளித்தார். பின்னர் தான் தனது அண்ணாவான இந்திரகுமாரை சம்பவ தினத்தன்று பஸ் ஏற்றிவிட சென்ற போது வித்தியாவின் அண்ணா அதனை கண்டதாக சாட்சியம் அளித்தார். தனக்கு வித்தியாவை தெரியாதென்றும், ஆனால் வித்தியாவின் அண்ணாவை தெரியும் என்றும் கூறியுள்ளார்.நான்காம் எதிரி கடற்படை மீது குற்றம் சுமத்தினார் நான்காம் எதிரியான மகாலிங்கம் சசீந்திரன், இந்த குற்றத்தை கடற்படைதான் செய்துள்ளதென மன்றில் சாட்சியம் அளித்தார். சாரதாம்பாள் மற்றும் தர்சினி எனும் பெண்களை தீவகத்தில் கடற்படைதான் படுகொலை செய்தது. அதேபோல இந்த கொலையையும் கடற்படையே செய்ததென தெரிவித்தார். அவர் இதற்கு முன் எந்த வாக்குமூலத்திலும் இந்த தகவலை தெரிவிக்கவில்லை. முதன் முதலாக நீதாய விளக்கத்தில் எதிரிகள் தரப்பு சாட்சியம் அளிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார்.ஆறாம் எதிரி வித்தியாவை கண்டதே இல்லை என்பது பொய்? ஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்தன் தனக்கு வித்தியாவை தெரியாது என்றும், ஆனால் அவரின் அண்ணாவை நன்கு தெரியும் என்றும் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.ஏழாம் எதிரிக்கு எதிராக சாட்சியம் இல்லை.ஏழாம் எதிரியான பழனிரூபசிங்கம் குகநாதனுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை.எட்டாம் எதிரி 12ஆம் திகதி புங்குடுதீவில் இருந்தார்.எட்டாம் எதிரியான ஜெயதரன் கோகிலன் தன்னை பொலிஸார் சித்திரவதை செய்து வீடியோ வாக்குமூலம் எடுத்ததாக தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். ஆனால் அவர் அதற்கு முதல் எங்கேயும் அது தொடர்பில் குறிப்பிடவில்லை. சம்பவ தினத்திற்கு முதல் நாள் புங்குடுதீவில் வாகனம் ஒன்றில் அமர்ந்திருந்து வித்தியாவை பார்த்தார் என இலங்கேஸ்வரன் என்பவர் சாட்சியம் அளித்தார்.ஆனால், தான் 12ஆம் திகதி கொழும்பில் இருந்ததாகவும், அன்றைய தினம் நெட்கபே ஒன்றிக்கு சென்று மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியதாகவும் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். ஆனால் இதற்கு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் கொழும்பிலிருந்த விடயத்தினை கூறவில்லை.சுவிஸ்குமாருக்கு 2 கோடி ரூபாய் பெரிய பணமில்லை!ஒன்பதாம் எதிரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார், 17ஆம் திகதி தன்னை பொதுமக்களிடம் இருந்து விஜயகலா மகேஸ்வரன் காப்பற்றிவிட்ட பின்னர் வீட்டுக்கு சென்றதாக சாட்சியம் அளித்தார். ஆனால் அது பொய். வீ.ரி.தமிழ்மாறன் தனது சாட்சியத்தில், சுவிஸ்குமாரின் வீட்டுக்கு தான் சென்றபோது அவர் அங்கு இருக்கவில்லை எனவும் அவருடைய மனைவி மகாலட்சுமியே வீட்டில் இருந்ததாகவும் சாட்சியம் அளித்தார்.அதேவேளை சிறைச்சாலையில் தான் இப்லான் என்பவருடன் கதைத்த விடயத்தினை ஒப்புக்கொண்டுள்ளார். இப்லான் தன்னிடம் 25 இலட்சம் பணம் கேட்டதாகவும், தான் அதனை கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.அது தொடர்பில் ஏன் எங்கும் முறையிடவில்லை என கேட்டதற்கு, ஒரு கைதியை இன்னொரு கைதி காட்டிக்கொடுக்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், சுவிஸ் நாட்டில் ஹோட்டல் ஒன்றில் சமையல்காரரராக வேலை செய்வதாகவும் மாதாந்தம் இலங்கை ரூபாய் பெறுமதியில் பத்து இலட்சம் வரை சம்பாதிப்பதாகவும், அங்கு மாதாந்தம் 5 தொடக்கம் 6 இலட்சமே செலவு எனவும் சாட்சியம் அளித்தார். அத்துடன் வருடத்திற்கு ஒரு தடவை இலங்கை வந்து போவதாகவும், அதன் போது 20 இலட்சம் ரூபாய் வரை செலவு செய்வதாகவும் சாட்சியம் அளித்தார்.அவ்வாறான ஒருவருக்கு 2 கோடி ரூபாய் என்பது பெரிய தொகையில்லை. எனவே சுவிஸ்குமார் இந்த வழக்கில் இருந்து தப்பிச் செல்ல இப்லான் ஊடாக குற்றப்புலனாய்வு பிரிவு பிரதான விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவிற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்துள்ளார்.7 எதிரிகளுக்கு எதிராகவும் குற்றச்சாட்டு நிரூபணம்.இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எதிரிகளாக கண்ட ஒன்பது பேரில் முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமார் மற்றும் ஏழாம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. அதற்கான போதிய சாட்சி ஆதாரங்கள் இல்லை.ஏனைய 7 எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார், மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார், நான்காம் எதிரியான மகாலிங்கம் சசிதரன், ஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன், ஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்த், எட்டாம் எதிரியான ஜெயதரன் கோகிலன் மற்றும் ஒன்பதாம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கு தொடுனர் தரப்பினால் நிரூபிக்கப்பட்டுள்ளது என தனது தொகுப்புரையில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தெரிவித்தார்.சுமார் ஐந்து மணித்தியாலங்கள் இந்த தொகுப்புரை இடம்பெற்றது. இதேவேளை, இன்றைய தினம் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: