மாத்திரையைப் போதையாக பயன்படுத்திய விவகாரம் – பிராந்திய மருந்தகங்களிலேயே மாணவர்களுக்கு விற்கப்பட்டன!

Sunday, January 13th, 2019

வலி. வடக்கு மீள்குடியமர்வுப் பகுதியில் மாத்திரைகளைப் போதைப்பொருளாகப் பயன்படுத்தினர் என்று கூறப்படும் மாணவர்கள் அந்தப் பிராந்தியத்தில் உள்ள சில மருந்தகங்களிலேயே அவற்றைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அந்த மருந்தகங்களில் சுகாதாரப் பகுதியினர் பரிசோதனை மேற்கொண்டபோது மாணவர்களுக்கு அந்த மருந்துகள் வழங்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு அசாதாரண நிலையில் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது.

மாணவர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று பாடசாலையில் நடைபெற்றுள்ளது. அதில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். தரம் 9 ஐச் சேர்ந்த இந்த 3 மாணவர்களும் வரவில்லை. அவர்கள் வகுப்பறையில் மயங்கும் நிலையில் சோர்வாக இருந்துள்ளனர். அதை அவதானித்த பாடசாலை உப  அதிபர் பொலிஸாரின் உதவியை நாடி மாணவர்களை தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தனது மூத்த சகோதரரிடம் இருந்த வலி போக்கும் மாத்திரை ஒன்றை ஒரு மாணவர் ஏனைய மாணவர்களுக்குக் கொடுத்துள்ளார். அதனைப் பயன்படுத்தியதால் உடலில் அசாதாரண நிலமை தோன்றியிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வலிகளுக்குப் பயன்படுத்தப்படும் மாத்திரை ஒன்றை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உடலில் இவ்வாறு அசாதாரண நிலமை ஏற்படும். மாணவர்களும் வலி நிவாரண மாத்திரை வகை ஒன்றைப் பயன்படுத்தினர் என்று எமக்குத் தெரிவித்துள்ளனர். அதற்குரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன என்று தெல்லிப்பழை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த மாத்திரைகளை மருத்துவப் பரிந்துரை இல்லாது மாணவர்களுக்கு வழங்கியுள்ளமை சோதனைகளில் தெரியவந்தது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாகச் சுகாதாரப் பகுதியினர் விரைவான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர். சுகாதாரப் பகுதியினர் பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்படப் பாடசாலைச் சமூகத்துக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் வேறு எங்காவது நடைபெறுகின்றனவா? என்பது தொடர்பான சோதனைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. அவ்வாறு அறிவிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள், சுற்றாடல் நிகழ்வுகள் தொடர்பாக அன்னியோன்ய அவதானிப்புடன் இருப்பது அவசியம் என்று சுகாதாரப் பகுதியினர் அறிவுறுத்தியுள்ளனர்.