மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் இன்று முன்னெடுப்பு – நாளைமுதல் தொடருந்து சேவைகளும் வழமைக்கு திரும்புமென திணைக்களம் அறிவிப்பு!

Sunday, August 1st, 2021

மாகாணங்களுக்கு இடையில், பேருந்து சேவைகள் மாத்திரமே இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக அனைத்து பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய தொடருந்து சேவைகளை நாளை 2 ஆம் திகதிமுதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளையதினத்தில் கொழும்புக்கான 15 தொடருந்து சேவைகள் இடம்பெறும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அரச சேவையாளர் வழமைபோன்று நாளை பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் விசேட தொடருந்து சேவைகளும் இடம்பெறவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் சுமார் 75 வீதமானவை செயற்படும் எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்து சேவையை தொழிலுக்காக செல்லும் பயணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஈடுபடுத்துவதாகவும் இடைப்பட்ட காலப்பகுதியில், பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பாரிய அனர்த்தங்களுக்கு மத்தியில் குறித்த சேவையினை ஆரம்பிப்பதனால் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை அனுமதிக்க வேண்டும். மாறாக மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான, மாகாணங்களுக்கு இடையிலான சகல பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இன்றுமுதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தினை தனியார் பேருந்துகள் ஆரம்பிக்க முடியும் என மாகாணசபைகளுக்கு அறிவித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

முன்பதாக கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த மே மாதம் 11 திகதிமுதல் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

குறித்த பயணக்கட்டுப்பாடு மே 30 வரை மீண்டும் நீடிக்கப்பட்டு பல தடைவைகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுவந்தன.

இந்நிலையில் அரசாங்கம் தற்போது அரச ஊழியர்களை வழமைப்போல் பணிக்கு அழைத்துள்ளது.

இதையடுத்த நெரிசல் நிலையினை குறைப்பதற்காக நாடளாவிய ரீதியில் பேருந்து மற்றும் புகையிரத சேவைகளை 75 சதவீத பயணிகளுடன் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: