மழைக்குப் பின் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு!

Friday, November 24th, 2017

மழையுடனான காலநிலைக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக் காய்ச்சல் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு சிரேஷ்ட வைத்திய அதிகாரி எஸ். யமுணாநந்தா கூறியுள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து கூறியதாவது;

 1,000க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் யாழ். போதனா வைத்தியசாலையில் பெய்து முடிந்த மழைக்குப் பின், யாழில் இரு வகையான காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுசிகிச்சை பெறுகின்றனர். “இன்புளுவன்சா எனப்படும் வைரஸ் காய்ச்சலும், டெங்குக் காய்ச்சலுமே இவ்வாறு பரவி வருகின்றது. இன்புளுவன்சா எனப்படும் வைரஸ் காய்ச்சல்ஏற்படும் முன், உடல் நோவு, அதிகளவு நோவுடன் தொண்டை அழற்சி, வாந்தி, உணவில் விரும்பமின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும். கூடுதலாக இக் காய்ச்சல்,சுவாசத்தொற்று, பொதுவிடங்களில் இடம்பெறும் தொடுகை போன்றன காரணமாக ஏற்படுகின்றன.

யாழ். போதனா வைத்தியசாலையில் சாதாரணமாக, 400 தொடக்கம் 500 பேர் வரையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மழையின் பின்னர் 1,000க்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சைக்காக வருகின்றனர். அதிகமாக இக் காய்ச்சலானது சிறுவர்கள் கர்ப்பிணிகள், வயதுவந்தோர், மற்றும் நீர்ப்பீடணம் குறைந்தோரையே பாதிக்கின்றது.

ஆகவே, பொது இடங்களில் இடம்பெற்ற தொடுகைகளின் பின் சவர்க்காரம் இட்டு கையைக் கழுவுவதன் மூலமும், இருமல் வரும்போது கைக்குட்டையை பயன்படுத்துவதன் மூலமும், குறித்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக் கொள்ள முடியும். இந்த வைரஸ் காய்ச்சலானது, ஆண்டு தோறும் இரு தடவைகள் ஏற்படுகின்றது.

வைரஸ் காயச்சல் தற்போது அதிகரித்துள்ள நிலை காணப்படுவதால், மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியரை நாடி, குருதிப் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். ஏப்ரல், நவம்பர் மாதங்களில் இவை அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அத்துடன், வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய, தகுந்த மாத்திரைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம், வைரஸ் காய்ச்சலில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்” என்றார்.

Related posts: